புதினுடன் சற்று நேரத்தில் பிரதமர் மோடி பேச்சு: வெளியுறவுத் துறைச் செயலர்

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி சற்று நேரத்தில் பேசவுள்ளதாக வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த ஷ்ரிங்லா கூறியதாவது:

“அரசுக்கு உக்ரைனிலுள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதே முதன்மையானது என பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் போலந்து, ரோமானியா, ஸ்லோவாகியா, ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் பேசினார்.

கடந்த சில நாள்களில் 4000 இந்தியர்கள் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறைக்கு 980 தொலைபேசி அழைப்புகளும், 850 மின்னஞ்சல்களும் வந்துள்ளன.

உக்ரைனிலுள்ள அவசர நிலையை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உக்ரைனிலுள்ள இந்தியர்களுக்கான பதிவு ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கப்பட்டது. இணைய வழி பதிவின் அடிப்படையில், 30 ஆயிரம் இந்தியர்கள் அங்கு உள்ளனர்.

உக்ரைனிலுள்ள இந்தியத் தூதரகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். அங்கு நிலவும் சூழல்களுக்கு ஏற்ப அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் பாதுகாப்பு வழங்குவது குறித்து பல்கலைக்கழகங்களிலும், மாணவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் கலந்தாலோசித்து வருகிறோம்.

ரஷியா மீது பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சில தடைகள் விதித்துள்ளன. எந்தவொரு தடையும் நமது உறவில் தாக்கத்தை உண்டாக்கும்.”

Leave A Reply

Your email address will not be published.