வேளாண் துறையை திறன்மிக்கதாக மாற்ற பட்ஜெட்டில் 7 திட்டங்கள்

வேளாண்துறையை நவீனமாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றுவதற்கு மத்திய பொது பட்ஜெட்டில் ஏழு வழிகளில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2022 – ஆம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறையில் ஆக்கபூர்வ தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றினார். அதில் வேளாண் துறையை வலுப்படுத்துவதற்கு நிதிநிலை அறிக்கையின் பங்களிப்பு குறித்த வழிவகைகளை அவர் எடுத்துரைத்தார். மெய்நிகர் முறையிலான இந்தக் கருத்தரங்கில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பல்வேறு வேளாண் அறிவியல் மையங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

வேளாண்துறையை நவீனமாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் ஏழு வழிவகைகளில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக கங்கை நதியின் இருகரைகளிலும், 5 கிலோ மீட்டருக்குள் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக விவசாயம், தோட்டக்கலை விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் கிடைப்பதற்கான திட்டங்கள், மூன்றாவதாக சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு பனை எண்ணெய் உற்பத்தி செயல் வலுப்படுத்தப்படுகிறது. நான்காவதாக பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தின் மூலம் வேளாண் உற்பத்திப் பொருள்களின் போக்குவரத்திற்கு புதிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ஐந்தாவதாக வேளாண் கழிவுகளை எரிசக்தி ஆதாரங்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரித்தல். இதற்காக கழிவுகளை நிர்வாகிக்க சிறந்த அமைப்புமுறை நிறுவப்பட்டுள்ளது. ஆறாவதாக நாட்டிலுள்ள 1.5 லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்களில் முழுமையான வங்கி சேவை வழங்குவதாகும். இதனால், விவசாயிகளுக்கும் ஊரகப் பகுதிகளிலும் நேரடிப் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். ஏழாவதாக திறன் மேம்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தி நவீனகால தேவைகளுக்கேற்ப வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பாடத் திட்டங்களில் மாற்றம் செய்யப்படுவது போன்ற குறிப்பிடத்தக்க திட்டங்கள் உள்ளன.

வேளாண்மையில் ட்ரோன் பயன்பாடு: மேலும் 21-ம் நூற்றாண்டில் வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், விவசாயத் தொழிலின் சூழ்நிலையை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக வேளாண்மையில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வேளாண்துறை சார்ந்த புதிய தொழில்முனைவோர் வரும்போதுதான் ட்ரோன் தொழில்நுட்பம் கிடைப்பதும் அதிகரிக்கும். நாட்டில் கடந்த 3-4 ஆண்டுகளில் 700-க்கும் அதிகமான வேளாண் சார்ந்த புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் 2023 -ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், பெருநிறுவனங்கள் இந்திய சிறுதானியங்களுக்கு பிராண்டுகளை அளித்து மேம்படுத்த முன்வர வேண்டும். இந்திய சிறுதானியங்களின் தரம் மற்றும் பயன்களைப் பிரபலப்படுத்த கருத்தரங்குகளுக்கும், இதர ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

பிரதமரின் கிஸான் சம்மான் நிதித் திட்டம், நாட்டின் சிறு விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 11 கோடி விவசாயிகளுக்கு ஏறத்தாழ ரூ.1.75 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக வேளாண்துறை பட்ஜெட் பலமடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கான வேளாண் கடனும் கடந்த 7 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. இது போன்ற ஊக்குவிப்பால் விவசாயிகளும் உற்பத்தியை அதிகரித்து சாதனையை படைத்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலையால் கொள்முதலிலும்கூட சாதனைகள் படைக்கப்பட்டன. இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்பட்டு, இத்தகைய பொருள்களுக்கான சந்தை மதிப்பு ரூ.11,000 கோடியை எட்டியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரூ.2,000 கோடியாக இருந்த இதன் ஏற்றுமதி, தற்போது ரூ.7,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றார் பிரதமர் மோடி.

Leave A Reply

Your email address will not be published.