உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுத்தால் ‘அணு ஆயுதத்தை கையில் எடுப்பேன்’.

உக்ரைன் மீது இரண்டாவது நாளாக ரஷியா ஏவுகணை வீச்சின் மூலமும், குண்டுவெடிப்பின் வழியாகவும் மூர்க்கத்தமான தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்த நிலையில், போருக்கு முன்னதாக ரஷிய அதிபர் புதின் ஆற்றிய ஒரு உரையில் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருப்பது அம்பலத்துக்கு வந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

அந்த உரையில் அவர் கூறி இருப்பதாவது:-

ராணுவ விவகாரங்களை பொறுத்தமட்டில், சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னரும், அதன் திறன்களில் கணிசமான பகுதிகளை இழந்தபிறகும், இன்றைய ரஷியா மிகவும் பலம்வாய்ந்த அணுசக்தி நாடுகளில் ஒன்றாக உள்ளது.

மேலும், பல அதிநவீன ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒரு குறிப்பிட்ட நன்மையைக் கொண்டுள்ளது. இந்த சூழலில், (உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுக்கம் விதத்தில்) எந்தவொரு நாடும் நேரடியாக நம் நாட்டைத் தாக்கினால் தோல்வியையும், பயங்கரமான விளைவுகளையும் (அணு ஆயுத தாக்குதல்) சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ரஷியா, அமெரிக்கா போரா?

உக்ரைனில் தற்போதைய போரின் இறுதியில் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அணுஆயுதப்போர் மூளக்கூடும் என்ற குழப்பமான வாய்ப்பையே புதின் சுட்டிக்காட்டி இருப்பதாக போர் நிபுணர்கள் கருதுகின்றனர்.

உக்ரைனுக்கு எதிரான போரில் அந்த நாட்டுக்கு ஆதரவாகவும், ரஷியாவுக்கு எதிராகவும் அமெரிக்காவோ பிற நேட்டோ நாடுகளோ, தாக்குதல் தொடுத்தால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுதம் இருக்கிறது என்கிற ரீதியில் புதினின் மிரட்டல் அமைந்து இருப்பது அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

1945-க்கு பின்….

1945-ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருகிற உறுதியான வழி இதுதான் என்று, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் கருதி, ஜப்பான் மீது அணுக்குண்டுகளைப் போட்டார். இந்த கொடிய தாக்குதலில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் சுமார் 2 லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அதன்பின்னர் இன்று வரை எந்தவொரு நாடும் அணு ஆயுதங்களை பயன்படுத்தியதில்லை.

ஆனால் இப்போது புதின்தான் முதன்முதலாக அணுக்குண்டை காட்டி மிரட்டி இருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் உக்ரைன் போர் நெருக்கடி உருவான உடனேயே ரஷியாவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படும் அபாயம் உண்டு என்பதை உணர்ந்துள்ளார். அவர் தொடக்கத்தில் இருந்தே நேட்டோ, உக்ரைனுக்குள் படைகளை அனுப்பாது என்று கூறி வந்தார். ஏனென்றால் அது அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கலாம். இது அணு ஆயுத அதிகரிப்புக்கும், மூன்றாம் உலகப்போருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடக்கூடும் என்பது ஜோ பைடனுக்கும் தெரியும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் உலகம் பார்த்தாக வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.