இலங்கையும் இந்தியாவும் 3 பாதுகாப்பு ஒப்பந்தங்கள்!

இலங்கையும் இந்தியாவும் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பை அதிகரித்து மேம்படுத்தும் விதத்தில் பாதுகாப்பு தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்பாடுகளை இறுதி செய்யும் நெருக்கமான கட்டத்தை எட்டி உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அவசரமாக உணவு, மருந்து, அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு சுமார் நூறு கோடி அமெரிக்க டொலர் (ஏறத்தாழ 22 ஆயிரம் கோடி ரூபா) கடன் திட்டத்தை இந்தியா வழங்கவிருக்கும் அதேசமயத்தில், மேற்படி பாதுகாப்புத் தொடர்பான 3 ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்பாடுகளும் மறு பக்கத்தில் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன எனத் தெரியவருகிறது

* இரண்டு டோர்னியர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்தல்.
* நாலாயிரம் தொன் எடையுள்ள கடற்படை மிதக்கும் கப்பல்துறையை இலங்கைக்கு கையகப்படுத்துதல்.
* புதுடில்லிக்கு அருகில் தொழில்நுட்ப நகரமான குருகிராமில் உள்ள – இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான – இந்திய கடற்படையின் தகவல் இணைவு மையத்தில் (IFC-IORஇல்) இலங்கைக் கடற்படைத் தொடர்பு அதிகாரியை கொழும்பு அனுப்பி இணைத்துக் கொள்ளல்.

– ஆகிய கடற் பாதுகாப்புத் தொடர்பான ஒப்பந்தங்களும் உடன்பாடுகளுமே எட்டப்பட்டிருக்கின்றன எனத் தெரிகின்றது.

மேற்படி தகவல் இணைவு மையம் வணிகக் கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கிறது. மற்றும் கடல் பயங்கரவாதம், பிராந்திய கடல்களில் கடற்கொள்ளையர் போன்ற அச்சுறுத்தல்களை கண்காணிக்கிறது.

இப்போதைய ஏற்பாட்டின்படி ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், மாலைதீவுகள், சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட இந்தியாவின் 10 பங்காளி நாடுகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை தொடர்பு அதிகாரி இந்த மையத்தில் இணைவார்.

இந்தியா வழங்கும் கடற்படையின் மிதக்கும் கப்பல்துறை என்பது போர்க்கப்பல்களின் தரம் மற்றும் விரைவான பழுதுபார்ப்புக்கான தானியங்கி அமைப்புகளுடன் கூடிய ஒரு வசதியாகும். கப்பல்கள் மற்றும் நாசகார கப்பல்கள் போன்ற பெரிய கப்பல்களைத் தூக்கிச் செல்லும் திறன் இத்தகைய கப்பல்துறைகளுக்கு உள்ளது.

மேலும், கப்பல்களின் திட்டமிடப்பட்ட அல்லது அவசரகால பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்காக ஒரு ‘ஜெட்டி’யுடன் (கப்பல் துறையுடன்) அல்லது அமைதியான நீரில் நங்கூரமிட்டவாறு செயற்பட இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான மற்றொரு சாத்தியமான பகுதி இலங்கைப் படை வீரர்களுக்கு இந்திய வசதிகள் மற்றும் நிறுவனங்களில் பயிற்சியை விரிவுபடுத்துவதும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.