பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்.

பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக பாகிஸ்தானில் பயணம் செய்து ஆடுவதால் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மழை பெய்ததால் நேற்று இரு அணியினரும் வலைப்பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனது. இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூரில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அதே உற்சாகத்துடன் களம் காணுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை வலுவானதாக இருந்தாலும், உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் தவிர மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ஆசிய கண்டத்தில் விளையாடிய அனுபவம் அதிகம் கிடையாது. கம்மின்ஸ் தலைமையில் வேகப்பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. சுழற்பந்து வீச்சில் நாதன் லயன் வலு சேர்க்கிறார்.

போட்டி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் ‘இந்த போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான திட்டம் எங்களிடம் இருக்கிறது. இருப்பினும் ஆடுகளத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகே ஆடும் லெவன் அணி இறுதி செய்யப்படும். ஆடுகளம் பெரிய அளவில் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்காது. எனவே 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்குவது குறித்து பரிசீலனை செய்கிறோம்’ என்றார்.

பாகிஸ்தான் அணி தனது கடைசி 8 டெஸ்ட் போட்டியில் 7-ல் வெற்றி கண்டு சிறப்பான நிலையில் உள்ளது. அத்துடன் உள்ளூர் சூழல் அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும். பேட்டிங்கில் கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், அசார் அலி, பவாத் ஆலம் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி மிரட்டுவார். காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப், கொரோனா பாதிப்பால் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் ஆகியோர் விளையாட முடியாமல் போனது அந்த அணிக்கு இழப்பாகும். ‘பஹீம், ஹசன் அணிக்கு தொடர்ந்து நல்ல பங்களிப்பு அளித்துள்ளனர்.

அவர்கள் ஆடாவிட்டாலும் அசார், பவாத், ரிஸ்வான் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் எங்களிடம் உள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த தொடரில் உலகின் சிறந்த அணியான ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் கடும் சவால் அளிப்போம்’ என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இவ்விரு அணிகளும் இதுவரை 66 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 33 போட்டியிலும், பாகிஸ்தான் 15 போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 18 போட்டி டிராவில் முடிந்தன.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்படுகிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, வார்னர், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.

பாகிஸ்தான்: ஷான் மசூத் அல்லது இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), பவாத் ஆலம், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நமன் அலி, சஜித் கான், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா.

Leave A Reply

Your email address will not be published.