ராகுல், பிரியங்கா பிரசாரம் எடுபடவில்லை: காங்கிரஸ் மதிப்பிழந்து வருகிறது

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரின் தேர்தல் பிரசாரம் எடுபடாததும், கட்சி வெற்றி பெறுவதற்காக அவர்கள் மேற்கொண்ட யுக்திகள் பலனளிக்காததும் காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பொறுப்பாளருமான பிரியங்கா 209 இடங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களையும் தெருமுனைப் பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தார். உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது எந்த ஒரு தலைவரும் மேற்கொள்ளாத அதிகபட்சமான தேர்தல் பிரசாரம் இதுவாகும்.

பிரியங்கா உத்தர பிரதேசத்தில் கவனம் செலுத்தினாலும், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர், ராகுல் காந்தியுடன் இணைந்து உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.
உ.பி.யில் பிரியங்கா பெண்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து குரல் எழுப்பினார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் கூட்டம் கூடியது. ஆனால் அவரது பிரசாரம் அக்கட்சிக்கு வாக்குகளை பெற்றுத் தரவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே கட்சிக்குள் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதும் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. எனவே, தேர்தலுக்குப் பின் கட்சிக்குள் களையெடுப்புகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடந்த 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்திருப்பது பெரும் பின்னடைவாகக் கருதப்படுவதாக “24, அக்பர் ரோடு’, “சோனியா: எ பயோகிராஃபி’ ஆகிய நூல்களின் ஆசிரியர் ரஷீத் கித்வாய் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “பஞ்சாபில் ஒரு தலித் முதல்வரை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி ஒரு பெரும் சூதாட்டத்தை நடத்தியது. ஆனால் அது பூமராங் போல அக்கட்சியினரை தாக்கி விட்டது.

அதேபோல, பிரியங்கா உத்தர பிரதேச அரசியலில் களம் இறங்கிய பின் மற்ற தலைவர்களின் இருப்பிடத்தை காணாமல் போகச் செய்து விட்டது. இரண்டாம் கட்டத் தலைவர்கள் காங்கிரஸில் தங்களுக்கான முக்கியத்துவத்தை இழந்து வருவதாக கருதுகின்றனர்.

ஏற்கெனவே, அக்கட்சியைச் சேர்ந்த 23 மூத்த தலைவர்களும் கட்சியை சீரமைக்க குழு ஏற்படுத்தி அமைப்பு ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதனை கட்சியின் மேலிடம் கண்டுகொள்ளாதது ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் கட்சியின் மேலிடத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டது. தற்போதைய சூழலில் ஜனநாயக முறையில் காங்கிரஸ் கட்சியைக் கட்டமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம் என்றார்.

இதேபோல ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரும் அரசியல் விமர்சகருமான சஞ்சய் கே.பாண்டே கூறுகையில், காங்கிரஸின் தற்போதைய மோசமான நிலைமை, கட்சியின் முக்கியத் தலைவர்களின் செல்வாக்கைக் குறைத்துவிட்டது என்றார்.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியரான மனீந்திரநாத் தாக்குர் கூறியதாவது:

ஏற்கெனவே சிக்கலில் உள்ள காங்கிரஸூக்கு இந்த தேர்தல் முடிவுகள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. தற்போது கட்சியின் மூத்த தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கக் காத்திருக்கிறார்கள்.

அரசியல் என்பது தனிநபர் விளையாட்டல்ல; அது ஒரு கூட்டு முயற்சி என்பதை சோனியா குடும்பத்தினர் உணர வேண்டும். கட்சிக்குள் உள்ள சக்திகளை திட்டமிட்டு ஒருங்கிணைக்காததும் தோல்விக்கு முக்கிய காரணம்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை, பிராந்திய பகுதிகளில் பெரும் சக்தியாக உருவான ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், சச்சின் பைலட் போன்ற தலைவர்களை ஊக்குவித்திருக்க வேண்டும். மேலும், அவர்களை மையப்படுத்தி ஒரு புதிய தலைமையை அந்தந்த பகுதிகளில் முன்னிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் கட்சி மேலிடம் அதனைச் செய்யத் தவறிவிட்டது.

முந்தைய காலங்களில் காங்கிரஸில் ஒவ்வொரு பிராந்தியங்களில் இருந்தும் தலைவர்கள் உருவாக்கப்பட்டிருந்தனர். அவர்களும் தலைமைக்கு விசுவாசமாக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து அந்தந்த பிராந்தியங்களில் ஆட்சியமைய ஆதரவாக இருந்தனர்.

பாஜகவில் கூட இதுபோன்ற பிராந்திய அளவிலான தலைவர்களாக யோகி ஆதித்யநாத், வசுந்தரா ராஜே போன்றவர்கள் இருப்பதைக் காணலாம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.