இந்திய மேற்கு பிராந்திய கடற்படை கப்பல்களின் இலங்கை விஜயம்.

நட்புறவு பாலங்களை கட்டியெழுப்புவதற்கான இந்திய கடற்படையின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இந்திய மேற்கு பிராந்திய கடற்படையின் நான்கு கப்பல்கள் மேற்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா அவர்களின் கட்டளையின் கீழ் 2022 மார்ச் மாதம் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தன.

சுதேசிய முறைப்படி அமைக்கப்பட்ட ஏவுகணைக் கப்பலான பிரம்மபுத்ரா, தல்வார் கப்பல் சகிதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்த நிலையில் சுதேசிய முறையிலான நாசகாரியான ஐஎன்எஸ்.சென்னை மற்றும் TEG ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தன.

கடற்படையினரின் மரபுகளுக்கு அமைவாக இரு இடங்களிலும் இக்கப்பல்களுக்கு இலங்கை கடற்படையால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2022 மார்ச் 10 ஆம் திகதி ஐஎன்எஸ்.சென்னை கப்பலில் இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய கோபால் பாக்லே அவர்கள் வரவேற்புபசாரம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.

இலங்கை ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அவர்கள் இந்த வரவேற்புபசாரத்தில் கலந்துகொண்டிருந்தார். அத்துடன் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபயவர்தன அவர்களும் இந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்று உரை நிகழ்த்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் சமுத்திரங்களின் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக்காட்டியதுடன் பொதுவான செழுமை, பாதுகாப்பு மற்றும் தற்போதைய சூழ்நிலையில் சுகாதாரம் ஆகியவற்றினை வெற்றி கொள்வதற்கு இரு நாடுகளையும் சமுத்திரங்கள் எவ்வாறு பிணைக்கின்றன என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பொதுவான சவால்களை வெற்றி கொள்வதற்கு இலங்கையுடன் தோளோடு தோள் நின்று ஆதரவினை வழங்குவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுதியிருந்தார். இந்த விடயங்களில் கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றெனவும் இவ்வாறான அமைப்புக்கள் ஊடாக காணப்படும் ஒத்துழைப்பானது மேலும் அபிவிருத்தி செய்யப்படவேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை, இங்கு கருத்துத்தெரிவித்திருந்த மேற்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி அவர்கள் இரு கடற்படையினருக்கும் இடையில் காணப்படும் வரலாற்று ரீதியான பிணைப்பினை சுட்டிக்காட்டியதுடன் பிராந்தியத்தில் சகலருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியினை (சாகர்) உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையினை பாராட்டியிருந்தார்.

அத்துடன் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பு விவகாரங்களில் இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமென இந்திய நிதியமைச்சர் உறுதிமொழி வழங்கியதையும் அவர் பாராட்டியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதுமட்டுமல்லாமல் இருநாட்டு மக்களுடைய ஆழமான தொடர்புகள், துறைமுகங்களின் அபிவிருத்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை மற்றும் அதிகளவான இந்திய முதலீடு ஆகியவற்றுக்கும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். உலகின் எதிர்காலமானது இந்தோ பசுபிக் மற்றும் பிம்ஸ்டெக் பிராந்தியங்களில் தங்கியுள்ளதென வலியுறுத்திக் கூறிய அவர் IORA மற்றும் இலங்கையின் இந்து சமுத்திர மாநாடு போன்ற தளங்கள் ஊடாக பிராந்தியத்தில் சமாதானம் நீடிப்பதற்காக விதி அடைப்படையிலான ஒழுங்கொன்றினை ஸ்தாபிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதிர்காலத்தில் இவ்வாறான பல விஜயங்கள் இந்தியக் கடற்படையால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மேற்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரி அவர்கள் வெளிவிவகார செயலர், இலங்கை இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி, மற்றும் இலங்கை கடற்படைத்தளபதி ஆகியோருடன் மரியாதை நிமித்தமான சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார். இலங்கை கடற்படையுடன் பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான பல்வேறு பயிற்சிகளில் இந்த கப்பல்கள் ஈடுபட்டிருந்ததுடன் சமூக ரீதியான நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டிருந்தன.

06.மேற்கு பிராந்திய கடற்படையின் இலங்கைக்கான விஜயமானது இரு கடற்படையினருக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவின் பிணைப்பினை வலுவாக்குவதுடன் பறத்தல் செயற்பாடுகள், மீள் நிரப்பல் அணுகுமுறைகள் மற்றும் தந்திரோபாய சூழ்ச்சிகள் உள்ளிட்ட கடல்சார் கூட்டாண்மை பயிற்சியின் அங்கமாக கடலிலும் துறைமுகத்திலும் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக சிறந்த இயங்குதிறனை அடைவதற்கும் உதவியது.

Leave A Reply

Your email address will not be published.