தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசவுள்ளார். அவை முன்னவர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பின், அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசவுள்ளார்.

பகல் 12 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில், நீட் விலக்கு சட்ட மசோதாவின் நிலை குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.