அண்டை நாடுகளுடன் கூடுதல் வர்த்தக, கலாசார உறவுகள்: அமித் ஷா வலியுறுத்தல்

அண்டை நாடுகளுடன் கூடுதல் வர்த்தக, கலாசார உறவுகளும் மக்களுக்கிடையான தொடர்புகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

எல்லையில் உள்கட்டமைப்புகளை உருவாக்கி, பராமரிக்கும் எல்.பி.ஏ. அமைப்பின் நிறுவன நாள் தினத்தையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்தியாவுக்கு அண்டை நாடுகளுடன் 15,000 கி.மீ. நீள நில எல்லை உள்ளது. 1947ஆம் ஆண்டுக்கு முன் நாம் அந்த நாடுகளுடன் இணைந்திருந்தோம். அந்த நாடுகளுடன் நாம் ஒரே மாதிரியான கலாசாரத்தையும், மொழிகளையும், பந்தத்தையும் பெற்றுள்ளோம். அண்டை நாடுகளுடன் வர்த்தக உறவுகளையும் கலாசார உறவுகளையும் மக்களுக்கு இடையிலான தொடர்பையும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
எல்லைப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க எல்.பி.ஏ. அமைப்பால் இயலும். அண்டை நாடுகளுடன் கலாசார உறவுகளை வலுப்படுத்தவும் இந்த அமைப்பால் முடியயும். மக்களுக்கு இடையிலான தொடர்புகளையும் ராஜீய உறவுகளையும் மேம்படுத்தவும் இந்த அமைப்பால் முடியும்.

ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தானுடன் இந்தியா கொண்டிருக்கும் 15,000 நீள எல்லையானது ஒவ்வொரு 50 கி.மீ. தூரத்துக்கும் மாறுபட்ட சவால்களை அளிக்கிறது. உலகின் எந்தவொரு நாடும் இந்த அளவுக்கு நில எல்லைச் சவால்களை சந்திப்பதில்லை. அதேபோல நில எல்லையால் பல்வேறு வாய்ப்புகளைப் பெறும் நாடும் இந்தியா போல வேறு எதுவும் இல்லை.

பிரதமரின் கனவுத் திட்டமான சுயசார்பு இந்தியாவை நாடு தற்போது அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும். எனினும், பல்வேறு பொருள்களைத் தயாரித்த பிறகு நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது ஏழு அண்டை நாடுகளுடன் புதிய வர்த்தக வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. அதை நில வழியில் மேற்கொள்ள முடியும்.

எல்.பி.ஏ. அமைப்பு மத்திய ஆயுதப்படை போலீஸ் அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.