“ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் 77 கோடி பயனாளிகள்: மத்திய அரசு தகவல்

“ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் 77 கோடி பேர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆளும் பாஜகவின் வெற்றியைக் குறிப்பிட்டு பியூஷ் கோயல் புதன்கிழமை பேசியதாவது: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதில் சந்திக்கும் சிக்கல்களைக் கருத்தில்கொண்டு, இந்த தொழில்நுட்பம் சார்ந்த “ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இந்தத் திட்டம் தற்போது 35 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு 77 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்ப அட்டையில் மாற்றம் செய்யாமல், உயிரி அடையாள பதிவு நடைமுறை மூலமாக, வேலை நிமித்தமாக செல்லும் இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும்போது எந்தவித சிக்கலுமின்றி அங்குள்ள நியாயவிலைக் கடைகளில் உணவு தானியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதுவரை 7 கோடி பேர், இந்த மாற்று இடங்களில் உணவு தானியங்கள் வாங்கிக்கொள்ளும் நடைமுறையைப் பயன்படுத்தி உள்ளனர்.

பயனாளிகள் நியாயவிலைக் கடைகளுக்கு தங்கள் குடும்ப அட்டையை எடுத்துச் செல்லவேண்டிய அவசியமில்லை. குடும்ப அட்டை எண் அல்லது ஆதார் எண்ணை மட்டும் அவர்கள் விரும்பும் கடைகளில் தெரிவித்து உணவு தானியங்களை வாங்கிக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
மேலும் துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பியூஷ் கோயல், “பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களுக்குப் பதிலாக பணம் கொடுக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. அவ்வாறு பணமாக கொடுப்பது, திட்டத்தின் உண்மையான நோக்கத்துக்கு பயன்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளது’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.