NCC மாணவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையில் சேர்க்க நாடாளுமன்ற குழு பரிந்துரை

என்சிசி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை தேசிய பேரிடர் மீட்பு படையில் சேர்ப்பதற்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.

சுனாமி, மழை வெள்ளம், புயல், காட்டுத் தீ போன்றவை ஏற்படும்போது தேசிய பேரிடர் மீட்பு படை எனப்படும் என்.டி.ஆர்.எஃப். உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதேபோன்று மாநில அளவில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எஸ்.டி.ஆர்.எஃப். எனப்படும் மாநில பேரிடர் மீட்பு படையினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த படையில் என்சிசி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை சேர்ப்பதற்கு 30 எம்பிக்களைக் கொண்ட மதிப்பிடுதலுக்கான நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு படை பலம் பெறும் என்று நாடாளுமன்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக காட்டுத் தீ பரவல் அதிகரித்துள்ளது. இதனை விரைந்து தடுப்பதில் சிக்கல்கள் இருப்பதால் அரிய வகை உயிரினங்கள், மருத்துவ தாவரங்கள் அழிவை சந்திக்கின்றன. இவற்றை கவனத்தில் கொண்டு மாவட்ட அளவில் வலுவான பேரிடர் படையை அமைப்பதற்கு மதிப்பிடுதலுக்கான நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.இந்த சிறப்பு அமைப்பு NDRF Regional Response Centre அல்லது ஆர்.ஆர்.எஃப். என்று அழைக்கப்படும்.

நாட்டின் பல்வேறு மக்களவை தொகுதிகள், கட்சிகளைச் சேர்ந்த 30 எம்பிக்கள் மதிப்பிடுதலுக்கான நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ளனர். அரசுக்கு மாற்று கொள்கைகள் குறித்து ஆலோசனை வழங்குதல், நிர்வாக சீர் திருத்தம் மற்றும் மேம்பட்ட நிர்வாகத்திற்கான பரிந்துரை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இந்தக்குழு மேற்கொண்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.