இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது எப்படி? – அடுத்து நடக்கும்?

இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாய் கொடுத்தாலும் அரிசி கிடைப்பதில்லை, பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பல மணி நேரம் இருளில் மூழ்கியிருக்கின்றன. வரும் நாள்களில் மின்வெட்டு அதிகம் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் விலைவாசி உயர்வும், மின்வெட்டும் மோசம்.விலைவாசியை தாங்க இயலாத மக்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகத் தப்பிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

கடன் அதிகமாகி, அன்னியச் செலாவணி கையிருப்பு தீர்ந்து போனதால் வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றி வந்த கப்பல்கள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளும் மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அதிபரின் மாளிகை முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி, தேசிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலைக்கு இலங்கை வந்தது எப்படி?
இலங்கைக்கு மூன்று வழிகளில் அதிகமான பணம் வருகிறது. ஒன்று தேயிலை, இரண்டாவது ஆடை உற்பத்தி மூன்றாவது சுற்றுலா. இதை மூன்று ‘டி’ என்கிறார்கள். பொருளாதாரத்தில் இந்த மூன்று துறைகள்தான் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.

இந்த வழக்கத்தை உடைத்தது 2020-ஆம் ஆண்டில் வந்த கொரோனா. 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையும் அண்டை நாடுகளும் சர்வதேச விமானச் சேவைகளை நிறுத்தின. நாடும் முடங்கியது. பொருளாதாரத்தின் தூண்களாக இருந்த தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலாத் துறை ஆகிய அனைத்தும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன.

இந்த மூன்றைத் தவிர வேறு எந்த நிரந்த வருமானமும் இல்லாத இலங்கை, படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது.

அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றி ஏன் பேசப்படுகிறது?
பிற நாடுகளின் நாணய மதிப்பில் ஒரு நாடு வைத்திருக்கும் பணமே அந்நியச் செலாவணி கையிருப்பு எனப்படுகிறது. வங்கிப் பத்திரங்கள், கடன் பத்திரங்கள், வைப்பு நிதி போன்ற பல வழிகளில் அந்நியச் செலாவணி சேமிக்கப்படுகிறது

பொதுவாக ஒரு நாட்டின் மத்திய வங்கி இவற்றைப் பேணும். ஒரு குறிப்பிட்ட அளவில் அந்நியச் செலாவணியைக் கையிருப்பில் வைத்திருப்பது பாதுகாப்பானது. தங்களது நாட்டின் நாணய மதிப்பு குறைந்தாலோ, வேறு வகையிலான நெருக்கடி ஏற்படும்போதோ இது கைகொடுக்கும்.

பெரும்பாலும் அமெரிக்க டாலர்களிலேயே அந்நியச் செலாவணி வைக்கப்படுகிறது. உலகத்திலேயே சீனாதான் அதிக அந்நியச் செலாவணியைக் கையிருப்பில் வைத்திருக்கும் நாடாக இருக்கிறது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி அந்த நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 3.35 ட்ரில்லியன் டாலர்கள்.

இந்த மதிப்பு இலங்கையைப் பொறுத்தவரை 1.6 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது. இலங்கைக்கான வரவு குறையத் தொடங்கியதால், இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி தொடர்ச்சியாகவே வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இது பொருளாதார நெருக்கடியின் ஆபத்தை உணர்த்தக் கூடியது.

இப்போதைய விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்?
இலங்கையில் பல பொருள்களின் விலை இரண்டு மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. இதற்கு இரண்டு வகையான காரணங்களைக் கூறுகிறார் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியரான அமிர்தலிங்கம்.

அந்நியச் செலாவணி இருப்பு குறைந்ததால் இலங்கை நாணயத்தின் நெகிழ்வுத் தன்மையைப் பேணுவதற்காக ரூபாயின் மதிப்பை இலங்கை மத்திய வங்கி குறைத்தது. இதனால் பொருள்களின் மதிப்பு படிப்படியாக உயரத் தொடங்கியது.

ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200 என்ற அளவில் இருந்து 275 ரூபாய்க்கும் அதிகமாகச் சரிந்திருந்திருக்கிறது. ரூபாயின் மதிப்புச் சரிந்தததால், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் திடீரென அதிகரித்தன.

பெட்ரோல், டீசல், எரிவாயு, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருக்கின்றன. இவற்றுக்குக் கொடுக்கும் அளவுக்கு இலங்கை வங்கிகளிடம் டாலர் கையிருப்பில் இல்லை. இதனால் இறக்குமதி தடைபட்டதால், பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் கட்டுப்பாட்டை இழந்து உயரத் தொடங்கின.

வேறு என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன?

அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு கோழித் தீவனம்கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. பால்மா, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என முக்கியமான பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்திருக்கின்றன.

நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. அல்லது மூடப்பட்டிருக்கின்றன. அது நெடிய மின்வெட்டுக்கு வழிவகுத்திருக்கிறது.

வாகனங்கள் இயக்கப்படாததால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளில் திடீர் ஆள் பற்றாக்குறையும், மருந்துகள் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் பொருளாதார பேராசிரியர் அமிர்தலிங்கம்.

பொருளாதார நெருக்கடி இலங்கைக்குப் புதிதா?
தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி போல சமகாலத்தில் கண்டதில்லை எனப் பலரும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில் 1970ம் ஆண்டுகளில் காணப்பட்ட பஞ்ச நிலைமையை விடவும், தற்போது நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சங்கரன் விஜேசந்திரன் கூறுகிறார்.

1970களில் இறக்குமதிக்கு தடை விதித்ததே அன்றைய நிலைமைக்கு காரணம் என கூறிய அவர், டாலர் தட்டுப்பாடே இன்றைய நிலைமைக்கான காரணம் எனவும் குறிப்பிடுகிறார்.

இலங்கைக்கு எவ்வளவு கடன் இருக்கிறது?
இலங்கைக்கு சுமார் 51 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டுக் கடன் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதில் சுமார் 7 பில்லியன் டாலர்களை இந்த ஆண்டே செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் இலங்கையின் கையிருப்பில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களே இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

இலங்கை ரூபாய் செல்லாததாகி விடுமா?
இலங்கையின் நாணயம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அதனால் முற்றிலுமாக அதன் மதிப்பை இழந்து வேறொரு நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் சூழல் ஏற்படுமா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.

ஆனால் மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்கிறார் விஜேசந்திரன்.

“இலங்கை பொதுவாக தன்னுடைய ரூபாவின் பெறுமதியை இழந்துக்கொண்டிருக்கின்றது. பாரிய முதலீடுகள், சர்வதேச நாடுகளின் உதவிகள் அல்லது நன்கொடைகள் கிடைப்பதன் ஊடாக, இந்த நிலைமையிலிருந்து மீளலாம். ஆகவே, அதன் அடிப்படையில் இன்னுமொரு நாட்டின் நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கான அவசியம் இப்போதைக்கு இல்லை என்று கருத முடிகிறது.”

ஒருவேளை இலங்கையின் ரூபாய் முற்றிலும் மதிப்பிழந்தால், “இலங்கைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்தியா அல்லது சீனாவின் நாணயத்தை இலங்கை பயன்படுத்தலாம். ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை” என்கிறார் விஜேசந்திரன்.

இலங்கைக்கு யார் உதவி செய்வார்கள்?
சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதி உதவியையே இலங்கை நம்பியிருக்கிறது என்கிறார் பேராசிரியர் அமிர்தலிங்கம். ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது.

இவற்றைக் கடந்து முதல் முறையாக ஐஎம்எஃப் என அழைக்கப்படும் சர்வதேச செலாவணி நிதியத்தையும் இலங்கை அணுகியிருக்கிறது. அதன் பிரதிநிதிகளை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச சந்தித்துப் பேசியிருக்கிறார். ஐஎம்எஃப்பிடம் கடன் பெறுவதில்லை என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஐஎம்எஃப்- இடம் கடன் பெறுவதில் சிக்கல் உண்டா?
சர்வதேச செலாவணி நிதியும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடன்களைக் கொடுத்துவிடக் கூடிய அமைப்பு அல்ல. இந்தியா, இலங்கை உள்பட 190 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்ட அமைப்பு அது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வரிகளை உயர்த்த வேண்டியது சர்வதேச செலாவணி நிதியத்தின் முதல் விதியாக இருக்கும் என்கிறார் பேராசிரியர் அமிர்தலிங்கம்.

இதனால் பொதுமக்களுக்கு விதிக்கப்படும் வரிகள் கணிசமாக உயரக்கூடும். பல்வேறு வகையான இலவச, குறைந்தவிலை சமூக நலத் திட்டங்களில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நேரிடும்

ஆயினும் ஐஎம்எஃப்-இல் கடன் பெறுவதன் மூலம் இலங்கையின் கடன் தர நிலை மேம்படும் என்றும், அதனால் பிற கடன்களை அடைப்பதற்கு அவகாசம் பெறுவது தொடர்பான பேச்சுகளைத் தொடங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இலங்கையில் தற்போதைய அரசும் அதிபரும் பதவி விலக நேருமா?
அண்மைக் காலமாகவே அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நெருக்கடிக்கு அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை. இப்படியொரு தருணத்தில் அரசுக்கும் அதிபரின் பதவிக்கு ஆபத்து இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

“இலங்கையின் அதிகாரங்கள் தீர்மானம் எடுக்கும் சக்தி நாடாளுமன்றத்தை விடவும் ஜனாதிபதிக்கே அதிகம் இருக்கின்றது. அரசாங்கம் பதவி விலகி ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே ஜனாதிபதி பதவி விலகி வேறு ஒருவருக்கு பொறுப்பைக் கொடுக்க வேண்டும். அல்லது புதிய தேர்தலுக்குப் போக வேண்டும். அல்லது செய்யக்கூடிய ஆளுமை உள்ள மேலை நாடுகளின் செல்வாக்கு, மேலை நாடுகளின் அங்கீகாரம், மேலை நாடுகளின் பங்களிப்பு ஆகிய செல்வாக்கு உள்ள ஒருவருக்கு இந்த நாடு கையளிக்கப்பட வேண்டும். அப்படியாக இருந்தால் மாத்திரமே இலங்கை மீண்டெழ முடியும். அப்படி இல்லையென்றால், இலங்கைக்கு எந்த வித முன்னேற்றமும் வராது.”

Leave A Reply

Your email address will not be published.