உக்ரைன் ரஸ்யப் பேச்சுவார்த்தை பலனளிக்குமா? : சண் தவராஜா

துருக்கியின் பண்பாட்டு மற்றும் வர்த்தகத் தலைநகர் எனக் கருதப்படும் இஸ்தான்புல்லில் மார்ச் 29ஆம் திகதி ரஸ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரண்டு தரப்பிலிருந்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு மாதத்தைக் கடந்தும் தொடரும் ஆயுத மோதல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும், இரண்டு தரப்பிலும் ஆயிரக் கணக்கான படையினரும் இறந்துள்ள நிலையில் மோதல் தணிவதற்கான வாய்ப்பு உருவாகி வருகின்றமை நம்பிக்கை தருவதாக உள்ளது. பல வருடங்களாக ரஸ்யா முன்வைத்துவரும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் அரசுத் தலைமை தெரிவித்திருந்தாலும், அரசாங்கத்தின் அங்கமாக உள்ள கடும்போக்காளர்களும், அவர்களுக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கிவரும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் – தமது இலக்குகள் நிறைவேறாத நிலையில் – அமைதி உருவாகச் சம்மதிப்பார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.

தனது கொல்லைப்புறத்தில் உள்ள, முன்னாள் நட்பு நாடான உக்ரைன் தன்னை எதிரியாக நினைத்துக் காரியமாற்றும் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்பதை பிரதான நிபந்தனையாக 2014 முதல் ரஸ்யா வலியுறுத்தி வருகின்றது. ஆனால், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் – 1991இல் தானே வழங்கிய வாக்குறுதியையும் மீறி – உக்ரைனை நேட்டோவில் இணைப்பதிலும், ரஸ்யாவுக்கு எதிரான ஒரு தளமாக உக்ரைனைப் பாவிப்பதிலும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வந்துள்ளது. பல்வேறு தடவைகளில், பல்வேறு வழிகள் ஊடாக வலியுறுத்தியும் கண்டு கொள்ளாத நிலையிலேயே, பொறுமையை இழந்து தான் படை நடவடிக்கையை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதாக ரஸ்யா தெரிவித்து வருகின்றது.

சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகளுள் ஒன்றாக விளங்கிய உக்ரைனில் பல இலட்சக் கணக்கான ரஸ்யர்கள் இன்னமும் வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வாழுகின்ற ரஸ்யர்களில் அநேகர் தங்களை உக்ரைனியர்களாகக் கருதாமல் ரஸ்யர்களாகக் கருதிச் செயற்படுவது உக்ரைனில் உள்ள ரஸ்ய எதிர்ப்பாளர்களுக்குப் பிடிக்காத நிலையிலேயே முரண்பாடு அதிகரித்தது. அந்த நிலையிலேயே 2014இன் பின்னான அரசியல் சூழலில் முரண்பாடு முற்றி ஆயுத மோதலாகவும் உருமாறியது.

இத்தகைய பின்னணியில் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக ஆயுத மோதலும் ஆரம்பித்துவிட்டது. புதிய புதிய ஆயுதங்களின் பயிற்சிக் களமாக மாறியுள்ள உக்ரைனை மற்றொரு ஆப்கானிஸ்தானாக உருவாக்கி, ரஸ்யாவுக்கு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்து, ஈற்றில் ரஸ்யா பல துண்டுகளாகச் சிதறி பலமிழந்து போவதையே மேற்குலகு விரும்புகின்றது. அத்தகைய நோக்கத்தை நிறைவேற்றும் களத்திற்கு ரஸ்யாவை இழுத்து வந்ததில் முதற்கட்ட வெற்றியை மேற்குலகு கண்டுவிட்டது என்பதே உண்மை.

எனினும், அமெரிக்கா ஏனைய நாடுகளில் மேற்கொண்ட அழித்தொழிப்புப் போர்களின் மாதிரியைப் பின்பற்றாமல் பொதுமக்களின் பாதிப்பைக் குறைத்து, இராணுவ நிலைகளைப் பெரிதும் இலக்கு வைத்து ரஸ்யா போரை நடத்துவது மேற்குலகின் திட்டங்களுக்குத் தடையாகவே இருந்து வருகின்றது. அது மாத்திரமன்றி, படையெடுப்புக்கான தனது நோக்கத்தைத் தெளிவுபடுத்திய ரஸ்யா, போரை நடத்திக் கொண்டே பேச்சுவார்த்தைகளையும் நடத்திக் கொண்டிருக்கின்றது. இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதி திரும்பலாம் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

ரஸ்யா முன்வைத்த நிபந்தனைகளுள் மிகவும் அடிப்படையான அம்சமான ‘நடுநிலையைப் பேணுதல்’ என்பதை எழுத்து மூலமாக உக்ரைன் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இது மிகவும் வரவேற்கப்படும் ஒரு அம்சமாகப் பார்க்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைகொண்டுள்ள தனது படையினர் சிலரை விலக்கிக் கொள்ள ரஸ்யா சம்மதம் தெரிவித்துள்ளது. அதேபோன்று முற்றுகைக்கு உள்ளாகியுள்ள துறைமுக நகரான மரியபோலில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற ஏதுவாக மோதல் நிறுத்தத்தையும் ரஸ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஸ்ய முரண்பாட்டை இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக அன்றி போர் மூலமே தீர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ள மேற்குலகம் இத்தகைய உடன்பாட்டால் அதிர்ந்துபோயுள்ளது. தமது பல ஆண்டுகால முயற்சி வீணாகிவிடுமோ என்ற அச்சம் காரணமாக “ரஸ்யாவின் வாக்குறுதிகளை நம்ப முடியாது. செயல்களையே நம்ப முடியும்” என்பது போன்ற அறிக்கைகள் மூலம் உக்ரைன் அரசுத் தலைமையின் கவனத்தைச் சிதறடிக்க முயற்சிப்பது தெளிவாகத் தெரிகின்றது.

உக்ரைன் அரசுத் தலைவர் ஷெலன்ஸ்கி சமாதானம் மீது நாட்டம் உடையவராகத் தன்னை அறிவித்துக் கொண்டே போர் மீதான தனது விருப்பத்தையும் வெளிக்காட்டி வருகின்றார். அவர் உண்மையிலேயே சமாதானத்தை விரும்பினாலும், அவரைச் சூழ உள்ள கடும்போக்காளர்கள் அதற்கு அனுமதிப்பார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில், இந்தச் சந்தேகத்தை உறுதிசெய்யும் வகையிலான செய்திகளே உக்ரைனில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

SBU என அழைக்கப்படும் உக்ரைனின் புலனாய்வுச் சேவை OUN என அழைக்கப்படும் உக்ரைன் தேசியவாதிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. உக்ரைனின் அரசியல் செல்நெறியில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தும் இந்த இரண்டு அமைப்புக்களும் ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை. அதனால் பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ளவர்களையும், உக்ரைனில் உள்ள ரஸ்ய ஆதரவாளர்களான எதிர்க்கட்சித் அரசியல்வாதிகளையும் இலக்குவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதுவரை பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் மற்றொருவர் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பல அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

உக்ரைன் சார்பாகப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட ரோமன் அப்ரமோவிச் உட்பட ஒருசிலர் நஞ்சூட்டப்பட்டதாக அமெரிக்க ஊடகங்களிலேயே செய்திகள் வெளியாகியதை நாமறிவோம். இது தொடர்பான தகவலை வெளியிட்ட வோல் ஸ்றீற் ஜேர்ணல் இந்த நஞ்சூட்டலின் பின்னணியில் மாஸ்கோவில் உள்ள கடும்போக்காளர்களே உள்ளதாகத் தெரிவித்து இருந்தது. ஆனால், உண்மையில் பேச்சுக்களை விரும்பாத அமெரிக்க ஆதரவு பெற்ற உக்ரைனின் கடும்போக்காளர்களே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக நடுநிலை நோக்கர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனின் கருத்தின்படி உக்ரைனில் நடைபெறும் மோதல் இன்று ஆரம்பமானதல்ல. அது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவது மட்டுமன்றி, பல ஆண்டுகளுக்குத் தொடரவும் போகின்றது. இந்த மோதலுக்காக பல பில்லியன் டொலர்களை அமெரிக்கா இதுவரை செலவிட்டு உள்ளது. தொடர்ந்தும் பல பில்லியன் டொலர்களைச் செலவிடும் உத்தேசத்தையும் கொண்டுள்ளது. அத்தகைய ஒரு பெரு முயற்சி சமரசத்தில் முடிவதை அமெரிக்கா விரும்பாது என்பது சிறு பிள்ளைக்கும் கூடப் புரியக் கூடிய விடயமே. அதற்குக் குறுக்கே யார் வந்தாலும் அவர் அகற்றப்படுவார். அது பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பிடிப்பவராக இருந்தாலும், பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்பந்தம் செய்யப் போகும் உக்ரைன் அரசுத் தலைவராக இருந்தாலும் முடிவு ஒன்றுதான்.

Leave A Reply

Your email address will not be published.