குற்றவியல் நடைமுறை மசோதா, அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது: ப.சிதம்பரம்

குற்றவியல் நடைமுறை மசோதா, அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறயுள்ளார்.

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் உயிரியியல் மாதிரிகளை சேகரிக்க வழிவகை செய்யும் மசோதாவை கடந்த திங்கட்கிழமை மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்தது. அதன் மீதான விவாதத்திற்கு பின்னர் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில், மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். பின்னர் பேசிய காங்கிரஸ் எம்பி. ப. சிதம்பரம், இது தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை மத்திய அரசு பரிசீலனையில் எடுத்துக்கொள்ளவில்லை என கூறினார்.

கர்நாடக அரசுக்கும் செல்வி மற்றும் புட்டுசாமி என்பவர்களின் புகழ்பெற்ற வழக்கை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம், அந்த வழக்கில் பாலிகிராப், நார்கோ பகுப்பாய்வுகள் தனிநபரின் உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை நினைவு கூர்ந்தார்.

முன்னதாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டில் தண்டனை விகிதத்தை மேம்படுத்தவும், சட்டத்தை மதிக்கும் குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவுமே குற்றவியல் நடைமுறை மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலம் மற்றவர்களை எச்சரிக்க முடியும் என்றும் அமித் ஷா கூறினார்.பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது

உக்ரைன் விவகாரம் குறித்து மக்களவையில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளும் முயற்சியாக அண்டை நாடுகளுடன் பேசி வருவதாக கூறினார்.

மேலும் இரு தரப்புக்கும் இடையிலான போரை கடுமையாக எதிர்ப்பதாகவும், ரத்தம் சிந்துவதன் மூலமும், அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொடுப்பதன் மூலமும் எந்தவொரு தீர்வையும் எட்ட முடியாது என நம்புவதாக தெரிவித்தார். உரையாடல் மற்றும் இராஜதந்திரம் ஆகியவை மட்டுமே சர்ச்சைகளுக்கு சரியான தீர்வாக இருக்க முடியும் என்றும் ஜெய் சங்கர் தெரிவித்தார்.

உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் விரைவில் இந்தியா முழுவதும் வெளியிடப்படும் என்றும், நாடு முழுவதும் 1 லட்சத்து 12ஆயிரம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா மக்களவையில் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.