பணம், அட்டை எதுவும் தேவையில்லை…..கையைக் காட்டிக் கட்டணம் செலுத்தலாம்.

நெதர்லந்தைச் சேர்ந்த பாட்ரிக் பாமென் (Patrick Paumen) என்ற ஆடவர் எந்தக் கடைக்கு அல்லது உணவகத்துக்குச் சென்றாலும் அவர் கவனிக்கப்படுவார்.

காரணம்…அவர் நம்மைப் போல் அட்டையைக் காட்டி கட்டணம் செலுத்துவதில்லை. கையை மட்டுமே காட்டுகிறார்.

கையைக் கட்டணம் செலுத்தும் இயந்திரம் முன் வைக்கிறார். அவ்வளவுதான்.
2019ஆம் ஆண்டு அவரது தோலுக்கு அடியில் பொருத்தப்பட்ட நுண்சில்லுதான் அதற்குக் காரணம்.

BBC செய்தி நிறுவனம் அது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளது.

வலிக்குமா?
நுண்சில்லைச் செலுத்தும்போது வலிக்குமா? இல்லவே இல்லை…கையைக் கிள்ளியது போல் இருக்கும் அவ்வளவுதான் என்கிறார்.

முதன்முதலில் 1998ஆம் ஆண்டு மனித உடலில் நுண்சில்லு பொருத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாகப் பொதுமக்களுக்கு அந்தத் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

பிரிட்டன்- போலந்தைச் சேர்ந்த Walletmor எனும் நிறுவனம் அதை வழங்கத் தொடங்கிய முதல் நிறுவனமாகியிருக்கிறது.

தொடர்பற்ற கட்டணம் செலுத்துவது எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் இதைப் பயன்படுத்தலாம் என்கிறது நிறுவனம்.

இது அரிசியைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கிறது.

முழுமையாகப் பாதுகாப்பானது என்கிறது நிறுவனம். உறுதியாக ஒரே இடத்தில் இருக்குமாம். மின்கலன், மின்னூட்டம் ஏதும் தேவையில்லையாம். இதுவரை 500 சில்லுகளை விற்றுவிட்டதாகச் சொல்கிறது நிறுவனம்.

இருப்பினும், தோலுக்குள் செலுத்துவது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பு இல்லை, எப்போதும் கண்காணிக்கப்படலாம் என்பது சிலரின் வாதம்.

ஆனால் அதன் வரையறை, தொழில்நுட்பம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டால் பிரச்சினை இல்லை என்கின்றனர் சிலர்.

ஏற்கனவே விலங்குகளில் பயன்படுத்தப்படும் இத்தகைய சில்லுகள், உடற்குறையுள்ளோருக்கு உபயோகமாக இருக்கலாம் என்கின்றனர் BBC பேசியிடம் சில நிபுணர்கள்.

Leave A Reply

Your email address will not be published.