கோட்டா – மஹிந்த அரசுக்கு எதிராக நாடெங்கும் இன்றும் போராட்டங்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டின் பல பாகங்களில் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கும் கடும் கண்டனக்கணைகள் தொடுக்கப்பட்டன. அரச பயங்கரவாதம் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது என மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் 12 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் தொடர்கின்றது.

இதற்கு ஆதரவு தெரிவித்து நாட்டில் பல பகுதிகளில் இன்று போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், 300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஹர்தாலுக்கும் அழைப்பு விடுத்திருந்தன. இதனை ஏற்று பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. இதனால் இயல்பு நிலை ஸ்தம்பிக்கப்பட்டது.

மலையகத்தில் பல பகுதிகளில் வீதி மறியல் போராட்டங்கள் இடம்பெற்றதால் பெரும் பதற்ற நிலையும் ஏற்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு ,பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.