கோடநாடு வழக்கு… 100க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சசிகலா பதில் – இன்றும் விசாரணை

கோடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, தனிப்படை போலீசார் இதுவரை 250-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக் மற்றும் கோடநாடு பங்களா மேலாளார் நடராஜன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியிருந்தனர். கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், பங்களா உரிமையாளரிடம் விசாரணை நடத்த அனுமதிக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், கோடநாடு பங்களாவின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டனர். அதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு, காலை 11 மணிக்கு சென்ற தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணையை நடத்தினர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் முன்னிலையில் 8 போலீசார் மேற்கொண்ட விசாரணைக்கு, சசிகலா முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.

அப்போது, ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது துரதிருஷ்டவசமானது என கூறிய சசிகலா, இதில், தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதற்கு போலீசாருக்கு துணை நின்று சாட்சி அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்று அவர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சசிகலாவிடம் மேற்கொண்ட விசாரணையில், கோடநாடு பங்களாவின் சாவி வழக்கமாக யாரிடம் இருக்கும், துணை மேலாளராக பணியாற்றிய தினேஷுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் என்ன என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பினர். அத்துடன், கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்த போது பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது என்றும் ஜெயலலிதா அறையிலும், தங்கள் அறையிலும் என்னென்ன ஆவணங்கள் இருந்தன என்றும் சசிகலாவிடம் வினவினர்.

2017 கொலை, கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு பங்களாவை நேரில் சென்று பார்த்தீர்களா என்பன உள்ளிட்ட 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் நாளில் ஐந்து மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தனிப்படை போலீசார், சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.