தடம் மாறாத பிரான்ஸ்? – சுவிசிலிருந்து சண் தவராஜா

பிரெஞ்ச் அரசுத் தலைவர் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி இம்மானுவெல் மக்ரோன் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனாலும், அவரின் தேர்தல் வெற்றி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெரிதும் கொண்டாட்டத்துக்கு உரிய ஒன்றாக இல்லாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. நடப்பு அரசுத் தலைவராக உள்ள ஒருவர் பிரெஞ்ச் அரசுத் தலைவர் தேர்தலில் இரண்டாவது தடவை வெற்றி பெறுவது 20 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நிகழ்ந்துள்ளது. அதேவேளை, மக்ரோனை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர வலதுசாரி வேட்பாளாரான லீ பென் அம்மையார் தனது வாக்கு விகிதத்தை 8 விழுக்காடு வரை அதிகரித்து உள்ளார். இந்தப் போக்குத் தொடருமானால் 2017 தேர்தலில் அவரின் வெற்றியைத் தடுக்க முடியாமல் போய்விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

48.7 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட பிரான்சில் 18.799 மில்லியன் மக்கள் மக்ரோனுக்கு வாக்களித்துள்ளனர். அளிக்கப்பட்ட வாக்குகளில் 58.54 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். அதேவேளை, லீ பென் 13.297 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். 2017இல் இதே இருவருக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலில் மக்ரோன் 66.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தத் தேர்தலை 13.656 மில்லியன் மக்கள் புறக்கணித்துள்ளனர். புறக்கணித்தோரின் எண்ணிக்கை லீ பென் பெற்ற வாக்குகளை விடவும் அதிகமாகும். அது மாத்திரமன்றி முதலாவது சுற்றை விடவும் இரண்டாவது சுற்றை அதிகமானோர் புறக்கணித்து உள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது. தேர்தலைப் புறக்கணித்தோரின் எண்ணிக்கை மொத்த வாக்காளர்களில் 28.01 விழுக்காடு ஆகும். அது மாத்திரமன்றி, இந்தத் தேர்தலில் 6.35 விழுக்காடு வாக்காளர்கள் (2,228,044) தங்கள் வாக்குகளை வெற்று வாக்குகளாக அளித்துள்ளனர். அத்தோடு 2.25 விழுக்காடு வாக்குகள் (790,946) திட்டமிடப்பட்டே பழுதாக்கப்பட்டுள்ளன. எனவே, இவை இரண்டும் எதிர்ப்பைக் காட்டுவதற்காக வாக்காளர்களால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட நடவடிக்கைகள் எனவே கருதப்பட வேண்டும்.

வாக்களிக்கத் தகுதி பெற்றோரில் மூன்றிலொரு பங்கினர் வாக்களிக்கத் தவறியமை அல்லது வாக்களிப்பைப் பகிஸ்காரம் செய்தமை சொல்லும் சேதி என்ன? முதல் சுற்றை விடவும் இரண்டாம் சுற்றில் சுமார் 3 மில்லியன் மக்கள் வாக்களிக்காமல் விட்டதற்குக் காரணம் என்ன? இவை ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.

உலகளாவிய அடிப்படையில், தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் விழுக்காடு வீழ்ச்சிகண்டு வருவது பொதுவான போக்காக உள்ளதை அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகின்றது. ஜனநாயகக் கடமையைப் புறந்தள்ளும் அளவுக்கு மக்களின் மனங்களில் நிலவும் விரக்தியே வாக்களிக்கத் தவறுவதற்கான அடிப்படையாகக் கருதப்பட முடியும்.

தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர் தங்களின் உண்மையான பிரதிநிதியாக இல்லை என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். பிரெஞ்ச் தேர்தலிலும் கிட்டத்தட்ட அதே போக்கே உள்ளது.

முதலாவது சுற்றில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு மக்கள் இரண்டாவது சுற்றில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கவில்லை என்பது தெரிந்ததே. இருந்தும் – தமக்குப் பிடித்தமில்லாத – அந்த இருவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் அந்த மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக இது நோக்கப்பட்டாலும், அது வாக்களிப்பில் இருந்து மக்களை விலகி இருக்கச் செய்கின்றது என்பதையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இரண்டாவது சுற்றில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களுமே வலதுசாரிச் சிந்தனையைக் கொண்டவர்களே. ‘செல்வந்தர்களின் வேட்பாளர்கள்’ எனக் கருதப்பட்ட இருவரும் தங்கள் நலனில் அக்கறை அற்றவர்கள் எனச் சாதாரண உழைப்பாளிகளும், தொழிலாளர்களும், மாணவர்களும் கருதுகின்றனர். தொழிற்சங்கப் போராட்டங்கள் ஆயினும், மக்களின் எழுச்சிகள் ஆயினும் அவை இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை உடையவர்களே இருவரும்.

ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய முஸ்லிம் சமூகத்தைக் கொண்டுள்ள நாடாகிய பிரான்சில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஆதரிப்பவர்களாகவும் இருவரும் உள்ளனர். தொழிலாளர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தற்போது உள்ள 62 இல் இருந்து 65 ஆக உயர்த்துவதற்கே இருவரும் முனைகின்றனர். அது மாத்திரமன்றி உலகளாவிய அடிப்படையில் போர்களை ஆதரிப்பவர்களாகவும் அவர்கள் உள்ளனர்.

தற்போது நடைபெற்றுவரும் உக்ரைன் போர் தொடர்பில் லீ பென் மாறுபட்ட கருத்தை முன்னர் தெரிவித்து இருந்தாலும் தேர்தல் சமயத்தில் அவரும் தன்னை மாற்றிக் கொண்டு நேட்டோவின் நிலைப்பாட்டை ஆதரிப்பவராக மாறியிருந்தார். எனவே, இருவரில் எவர் வெற்றி பெற்றிருந்தாலும் பிரான்சின் செல்நெறியில் பாரிய மாற்றம் இருக்காது என்பதே பெரும்பாலான பிரெஞ்ச் மக்களின் கருத்தாக உள்ளது. ஆனாலும், லீ பென்னை விடவும் மக்ரோன் பரவாயில்லை என்ற சிந்தனையே அவரின் வெற்றிக்குப் பெரிதும் துணை நின்றது. ஆனால், இதே நிலை தொடர்ந்தும் நீடிக்காது என்பதையே அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அரசுத் தலைவர் தேர்தல்களைத் தொடர்ந்து யூன் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. 577 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ள இந்தத் தேர்தலில் மக்ரோனின் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்க மாட்டாது என்பதையே தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்தலை இலக்கு வைத்து இடதுசாரிகள் ஒரு தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளனர். பல கட்சிகள் சேர்ந்து அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணியே பெரும்பாலும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசுத் தலைவர் தேர்தலின் முதற் சுற்றில் மூன்றாம் இடத்தைப் பிடித்த ஜீன்-லக் மெலன்சோன் பெரும்பாலும் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கான சாத்தியங்களே உள்ளதாகத் தெரிகின்றது. நாடாளுமன்றம் உள்நாட்டு விவகாரங்களுக்கு மாத்திரமே பொறுப்பாக உள்ளது. அயலுறவுக் கொள்கையில் மக்ரோன் மாத்திரமே தனித்து முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ள நிலையில் இடதுசாரிகள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினாலும் அவர்களால் பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாத நிலையே நிலவும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்ட வல்லரசு நாடாக பிரான்ஸ் உள்ள போதிலும் அதன் வெளியுறவுக் கொள்கைகள் பெரும்பாலும் அமெரிக்க சார்பாகவே இருந்து வருகிறது. எனவே, மக்ரோன் அல்ல வேறு யார் பிரான்சின் அதிபராக வந்தாலும் வழக்கமான பாதையிலேயே பிரான்ஸ் பயணிக்கும் எனத் தாராளமாக நம்பலாம்.

Leave A Reply

Your email address will not be published.