ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்து உள்ளார். அவருக்கு வயது 46.

இதுபற்றி குயின்ஸ்லேண்ட் காவல் அதிகாரிகள் கூறும்போது, சைமண்ட்சின் கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது, சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது. காரில் அவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்துள்ளார்.

அவரை காப்பாற்ற துணை மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், அதில் பலனில்லை என கூறியுள்ளார். உயிரிழந்த சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

அவர் அணிக்காக 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆல்ரவுண்டரான அவர், பேட்டிங் செய்வதுடன் நடுத்தர வேகம் மற்றும் சுழற்பந்து என தேவைக்கேற்றபடி பந்து வீசவும் செய்வார். சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார்.

நடப்பு ஆண்டில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், சைமண்ட்சும் விபத்தில் உயிரிழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.