யாசகம் பெற்ற ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தந்த நபர்! நெகிழ்ச்சி தகவல்

தமிழகத்தை சேர்ந்த 70 வயது முதியவர் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரம் பணத்தை இலங்கை தமிழர் நலனுக்கு அனுப்பி வைக்குமாறு ஆட்சியரிடம் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்தியா சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் சார்பில் அரிசி, பால் பாக்கெட்டுகள், மளிகை, மருந்து பொருட்கள் ஆகியவை இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் திண்டுக்கல்லை சேர்ந்த 70 வயது முதியவர் பாண்டி என்பவர் தான் யாசகம் பெற்ற ரூ.10ஆயிரம் பணத்தை இலங்கை தமிழர் நலனுக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் இன்று வழங்கினார்.

யாசகம் பெற்ற ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தந்த நபர்! நெகிழ்ச்சி தகவல்

பாண்டி கூறுகையில், நான் திண்டுக்கல் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது தினசரி தேவைக்கு போக மீதி பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தேன்.

தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் கஷ்டப்படுவதை அறிந்து மனம் வருந்தினேன்.

என்னால் முடிந்த சிறிய உதவியாக நான் சேர்த்து வைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை இன்று மாவட்ட கலெக்டரிடம் வழங்கினேன். இது எனக்கு சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.