டீல் ரணிலும் : ராஜபக்ச புளுக்கையும்

மே 09 இரவு இலங்கை முற்றாக மாற வேண்டிய இரவு.

அன்று காலை, ராஜபக்சே ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம போராட்ட களத்தை தாக்கி, போராட்டக்காரர்களையும் தாக்கினர்.

இதை கண்ணுற்ற மக்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மஹிந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு மரண பயத்தில் அலரிமாளிகையில் ஒளிந்து கொண்டார்.

அதேநேரம், ​​போராட்டக்காரர்கள் அலரிமாளிகையை முற்றுகையிட்டனர்.

மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் அலரி மாளிகைக்கு உள்ளே சிக்கிக் கொண்டனர்.

அன்றைய மாலை நேரம் முதல் இரவு விடியும்வரை, எம்.பிக்கள்., அமைச்சர்கள் என அநேகரது வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.

ராஜபக்சக்களின் தந்தை டி.ஏ. ராஜபக்ஷவின் சிலை தரையில் தகர்த்து வீசப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள் பதுங்கியிருப்பது போல அச்சத்தோடு இருந்தார்.

கோட்டாபயவின் பதவி விலகல் அறிவிக்கப்படும் தருணத்திற்காக மக்கள் காத்திருந்தனர்.

‘கோட்டா கிளம்பிட்டானா?’

‘ஜனாதிபதி ராஜினாமா செய்திட்டானா?’

அன்று இரவிலும் மறுநாளும் மக்கள் கேட்ட கேள்வி இதுதான்.

காலிமுகத்திடல்  போராட்டத்தின் வெற்றித் தருணம் ,  சில மணிநேரங்கள் அல்லது நிமிடங்களில் கிடைக்கும் நிலையிலேயே  இருந்தது.

‘கோட்டா பதவி விலகினால் என்ன  நடக்கும்?’

கோட்டா பதவி விலகினால் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு பிரதமர் இல்லாத நிலையில் சபாநாயகரே தற்காலிக ஜனாதிபதியாக இருப்பார்.

சபாநாயகர் ஜனாதிபதியாக இருந்தால் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தவிர்க்க முடியாத வகையில் பிரதமராகி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் சூழலே இருந்தது.

ஏனெனில் கோட்டா வெளியேறினால் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என்பதே சஜித் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கையாக இருந்தது.

அப்படி நடந்தால் ராஜபக்ச குடும்பத்தில் இல்லாத ஒருவரே மொட்டு கட்சிக்கு தலைமை தாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியில் இருந்து யாராவது பொது சன பெரமுண (மொட்டு கட்சி)  தலைவராக வந்தால் ராஜபக்சக்களின் அரசியல் அத்தோடு  முடிந்துவிடும்.

சபாநாயகரின் கீழ்  ஜே.வி.பி கூட சர்வகட்சி அரசாங்கத்தை ஆதரித்திருக்கும்.

இவ்வாறான சர்வகட்சி அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருந்தால், வெளிநாடுகள் இலங்கைக்கு உதவ நினைத்திருக்கும்.

அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சுமந்திரன் கூட  அதிகாரப் பகிர்வு பிரச்சனைகளை  இந்நேரத்தில் தற்காலீகமாக ஒதுக்கி வைத்துவிட்டு ,  சர்வகட்சி அரசில் ஒரு அமைச்சராகப் பதவியேற்று  ,  இலங்கைக்கு  சர்வதேச  உதவியை கேட்கும் நிலையே இருந்தது.

இலங்கைக்கு டொலர்களை அனுப்புமாறு புலம்பெயர் டயஸ்பொறா மக்களைக் கேட்பதற்கும் எண்ணியிருந்தனர்.

அப்படி நடந்தால் திருகோணமலை கடற்படை பங்களாவில் , மகிந்த ராஜபக்ச குடும்பம் மட்டுமல்ல கோட்டாபயவும் பதுங்கி இருப்பார்.

அப்படியான ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் , அவர்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ள வைத்து ,  அரச சொத்துகளை திருடியிருந்தால் அவற்றை  பறிமுதல் செய்திருக்கலாம்.

காலிமுகத்திடலில் உள்ள மக்கள் போராட்டத்தின் பிரதான கோரிக்கை,  ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நாட்டுக்கு மீட்டுத் தர வேண்டும் என்பதுதான்.

நொடியில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

இலங்கைக்கு மே மாதம் என்பது ஒரு அற்புதமான மாதம். நாட்டின் அதிர்ஷ்டம் சுழல்கின்ற மாதம் இது.

2009 மே மாதம் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டார்.

இம்முறை இலங்கையில் தீமைகள் ஒழிந்து நல்ல அதிர்ஷ்ட காலம் மீண்டும் வரும் என்று மக்கள் நினைத்தனர்.

Lee Kuan Yew_ Singapore

ஆனால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போரில் வெற்றி பெற்றாலும் ,  பொருளாதாரத்தில் வெற்றி பெறுவார் என தான் நினைக்கவில்லை என சிங்கப்பூருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஒருமுறை தெரிவித்திருந்தார்.

அதற்கான காரணம் மகிந்த ஒரு இனவாதி  என்றும் அவர் கூறியிருந்தார்.

‘மஹிந்த ராஜபக்ச ஒரு இனவாதி. அவரைப்பற்றி படித்திருக்கிறேன். என்னால் அவர் மனதை மாற்ற முடியாது.

இது லீ குவான் யூவின் தீர்க்கதரிசனம்.

அவர் இறப்பதற்கு முன் இந்தக் கணிப்பைச் சொன்னார். அவர் இறப்பதற்கு முன் கடைசியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கணிப்பை அவர் சொல்லியிருந்தார்.

அவர் சொன்னது சரிதான்.

ராஜபக்ச ஆட்சியில் நாடு முன்னேறாது.

2009ல் இலங்கையின் தலையெழுத்தை ராஜபக்சேக்கள் மாற்றினார்கள்.

ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்ப மக்கள் வீதியில் இறங்கிய தினம் மே 09.

அப்போது திருகோணமலையில் உள்ள கடற்படை வீட்டில் ராஜபக்சே குடும்பம் சிக்கியிருந்தால், இலங்கையின் அதிர்ஷ்டம் மெல்ல நல்லதொரு நிலைக்கு சுழல ஆரம்பித்திருக்கும்.

ஆனால் நொடியில் எல்லாமே மாறிவிட்டது.

மாறவில்லை ஆனால் மாற்றப்பட்டது.

மே 2022 இல், மே 2009 இல், அதிர்ஷ்டத்தின் சுழற்சி பின்னோக்கிச் சென்றது.

2009 அதிர்ஷ்டச் சுழற்சியை ராஜபக்சக்கள் மட்டுமே தலைகீழாக மாற்றினர்.

2022 அதிர்ஷ்டச் சுழற்சியை புரட்டிப் போடும் பலம் ராஜபக்சக்களிடம் இருக்கவே இல்லை. தவித்துப் போய் இருந்தார்கள்.

அப்போதுதான் ரணில் விக்கிரமசிங்க அந்த பலத்தை அவர்களுக்கு கொடுத்தார்.

ஆகஸ்ட் 5, 2019 அன்று கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் ‘கோட்டா – ரணில் ரகசிய ஒப்பந்தம் அம்பலமானது’ என்ற தலைப்பில் அருமையான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்ததுது.

அப்போது ரணில் பிரதமராக இருந்தார்.

கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த நியமித்தார்.

இதுதான் செய்தி.

‘பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலையீட்டின் ஊடாக புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உதவியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு கோட்டாபயவுக்கு  , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  உதவுகிறார் என தெரிவித்து கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் தகவல் வெளியிட்டிருந்தது. 

ஆட்களை பதிவு செய்யும் அலுவலகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகியன,   அமைச்சர் வஜிர அபேவர்தனவின் கீழ் இருந்தது.

கோட்டாபயவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளமையும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், ரணிலை ,  ராசபக்சவினர் பாதுகாப்பதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்வதாகவும் கோட்டாபய உறுதியளித்துள்ளார் . கோட்டாபய ஜனாதிபதியான பின்னரும் ஐ.தே.க ரணில் தலைமையை தக்க வைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க விரும்புவதாகத் தெரிந்தது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்பு , தனது மாமா ரணிலுக்கு கிடைக்காவிடின், கோட்டாபயவை வெற்றிபெற விக்கிரமசிங்க குடும்பத்தினர் பாடுபடுவார்கள் என ரணில் விக்கிரமசிங்கவின் மருமகள் இஷினி விக்கிரமசிங்க  தெரிவித்திருந்தார்.

கோட்டாபயவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு தயாராகி வந்த தெரண ஆளுநர் திலித் ஜயவீர மத்திய வங்கிக் கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன அலோசியஸின் நெருங்கிய நண்பர் எனவும், திலித் ஜயவீரவின் ஊடாக ரணிலுக்கும் விக்ரமசிங்க குடும்பத்துக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எந்தத் தீங்கும் செய்யப் போவதில்லை எனவும் கோட்டாபய உறுதியளித்திருந்தார். 

கொழும்பு டெலிகிராப் இணையத்தளம்  வெளிப்படுத்தியது போல ,  அமைச்சர் வஜிர அபேவர்தன, ரணில் தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும் அன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றம் பிரவேசிக்கும் முன்னர் பிரதமர் ரணில் ,   விரைவில் எதிர்க்கட்சித் தலைவராகி, பிரதமராவார்  என தெரிவித்திருந்தார்.

வஜிரா சொன்னதில் ஒன்று மட்டும்  தவறிவிட்டது.

அவர்  நினைத்தது போல் ரணிலால் எதிர்க்கட்சித் தலைவர் ஆக முடியாது போனது .

ஆனால் ஒரே ஒரு ஆசனத்தில் ரணில் பிரதமராகிவிட்டார்.

‘கோட்டாவின் வேட்புமனுவில் சட்டத் தடைகள் நீக்க உதவியமைக்காக  ராஜபக்ச குடும்பத்தினர் ரணிலுக்கு வழங்கிய பரிசா பிரதமர் பதவி?’

இது இன்று நேற்றல்ல , வெகு காலமாக  ரணிலுக்கு ராஜபக்சக்கள் கொடுக்கக் காத்திருந்த  பரிசுதான் இது. 

2010 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் , ராஜபக்சக்களின் வெற்றிக்காக தனது காலை இழுத்து தோல்வியடைய வைத்ததாக ,  சரத் பொன்சேகா ஒன்றுக்கு மேற்பட்ட முறை கூறியுள்ளார்.

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் சஜித்தின் தலைமைத்துவத்தை கோரி கட்சி உறுப்பினர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது, ​​மஹிந்த எந்த நேரத்திலும் தன்னை பிரதமராக்குவார் என ரணில் எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் ரணிலை  , எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் வைத்திருக்கவே மஹிந்த விரும்பினார்.

2018 ஆட்சிக் கவிழ்ப்பில் ரணில் பிரதமர் பதவியை இழந்து மகிந்த பிரதமரான போது  ரணில்,  நாங்கள் எதிர்க்கட்சிக்கு செல்வோம் என்றார்.

இதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் ஏனைய கட்சித் தலைவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மைத்திரி , பிரதமர் பதவியை சஜித் அல்லது கருவுக்கு கொடுத்து விடுவாரோ என ரணில் அஞ்சினார்.

மைத்திரி , சஜித்திடமும் , கருவிடமும் பலமுறை வேண்டியும்  அவர்கள் இருவரும் பிரதமர் பதவியை ஏற்க  மறுத்துவிட்டனர்.

அப்போது கோட்டாபய ரணிலை சந்திக்க அலரி மாளிக்கைக்கு வந்தார்.

ரணிலைத் தவிர சஜித்துக்கோ ,  கருக்வுகோ பிரதமர் பதவி கொடுத்தால் மகிந்த பதவி விலக மாட்டார் எனும் உறுதியை கோட்டாபய , ரணிலிடம் தெரிவித்தார்.

ரணில் தான் அடுத்த பிரதமர் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே ,  மகிந்த பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

2020 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்து ரணில் வீட்டில் இருந்தபோது, ​​தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு வருமாறு ரணிலிடம் மஹிந்த கூறினார்.

ரணில் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என மகிந்த டெய்லி மிரர் பத்திரிகைக்கு அறிக்கை ஒன்றையும்  வழங்கியிருந்தார்.

ரணில் நாடாளுமன்றத்துக்கு வந்த அன்று ‘நீங்கள் பாராளுமன்றம் வந்து போங்கள்’ எனும் தலைப்பில் இவர்களது ஒப்பந்தத்தை வெளிப்படுத்தியிருந்தோம்.

ரணிலைக் கொண்டுவந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பலத்தை உடைத்து, சஜித்தை வீழ்த்தி, ரணிலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க ராஜபக்சக்கள் விரும்பினர். 

ஆனால் வேலை சரியாக நடக்கவில்லை.

ராஜபக்சவினரது ஒப்பந்தத்துக்காகத்தான் ,  ரணில் பாராளுமன்றம் வருகிறார் என்பது சஜித்தின்  ஐக்கிய மக்கள் சக்திக்கு  தெரியும்.

அதன் பின்னர் தனக்கு பிரதமர் பதவி வழங்கினால் ஐக்கிய மக்கள் சக்தியை  உடைத்து சஜித்தை முடித்து விடுவேன் என ரணில் தெரிவித்தார். ராஜபக்சக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பார்க்கலாம்’ என்றார்கள்.

காலிமுகத்திடல்  போராட்டம் வந்ததும் ராஜபக்சக்கள் அச்சமடைந்தனர். 

ராஜபக்சக்களை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதி பதவி ராஜபக்சவின் கைகளில் இருக்க வேண்டும் என்றும் அதற்காக பிரதமர் மகிந்தவை பலிகடா ஆக்க வேண்டும் என்றும் ராஜபக்ச குடும்பத்தினர் கருதினர்.

மகிந்த அதற்கு இணங்கிய போதிலும், மஹிந்த ராஜினாமா செய்த பின்னர் யாரை நியமிப்பது என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது.

அதற்கு ரணில்தான் சிறந்தவர் என்ற கருத்தை ராஜபக்சே குடும்பத்தினர் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். ரணிலை பிரதமராக்குவதன் மூலம் பல நோக்கங்களை அடையலாம் என  நினைத்தார்கள்.

முதலாவது , காலிமுகத்திடல் வெகுஜனப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதாகும். 

இரண்டாவது , ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை  உடைத்து சஜித்தை முடிப்பது.

மூன்றாவதாக, மக்கள் போராட்டத்தை முடித்த பின்னர் ,  ரணிலிடம் இருந்து ராஜபக்ச குடும்பம் மீண்டும் பிரதமர் பதவியைப் பெறுவது அல்லது  பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு ரணிலே காரணம் என சொல்லி ரணில் தலையில் தவறுகளை போட்டு விட்டு ,   ராஜபக்சக்கள் ‘நல்ல பிள்ளைகள் ’ போல அடுத்த  தேர்தலுக்குச் செல்வது.

நாடு முழுவதும் எரிந்த மே 09 ஆம் திகதிக்கு முன்னரே ராஜபக்சக்கள் இவற்றைத் திட்டமிட்டனர். 

மே 09 காரணமாக, திட்டங்கள் விரைவாக நடைபெற வேண்டி இருந்தன.

சஜித்தை பிரதமர் பதவி ஏற்க  வருமாறு கோட்டாபய ஒரு சாட்டுக்காகவே அழைத்தார். பின்னர் அடுத்து பிரதமராக பொறுப்பேற்குமாறு பொன்சேகாவையும் வரவழைத்து கோட்டா பேசினார். கரு ஜெயசூர்யாவையும் அழைத்தார். இதெல்லாம் ஒரு நாடகம்தான்.

இந்த போலி அழைப்புகளை அனுப்பும் போது ,  ரணிலுடன் ஏற்கனவே கலந்தாலோசித்து அடுத்த திட்டம்  குறித்து திரைமறைவில்  ஆலோசனைகள் நடந்து கொண்டிருந்தன.

இலங்கையின் சரித்திரத்திலோ அல்லது உலக சரித்திரத்திலோ தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தலில் தோல்வியடைந்து ,  பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதில்லை.

தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமராக்கியதன் அவமானத்தை மறைக்க கோட்டாபய ,  சஜித், பொன்சேகா மற்றும் கருவை அழைத்தார்.

இறுதியாக சஜித் வேண்டாம் என்று கூறியதால் ரணிலை நியமித்ததாக கோட்டாபய தெரிவித்தார்.

ரணிலை  பிரதமராக நியமிக்கும் முடிவை எடுத்ததை ,  நாடும் உலகமும் நம்பும்படி முன்னிறுத்தி நியாயப்படுத்த , உண்மைக்கு புறம்பான  இப்படியான  கதை சொல்லப்பட்டது.

ரணிலிடம் இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ள பணி, நாட்டைக் கட்டியெழுப்புவது அல்ல, மக்களின் ஒற்றுமையை உடைத்து சஜித்தை முடிப்பதாகும். காலிமுகத்திடலில் மக்கள் போராட்டத்தை முற்றாக ஒழிப்பதுவும்  ஒரு முக்கிய வேலையாக உள்ளது. 

ரணில் தனது மைத்துனர் ருவானிடம் காலிமுகத்திடல் போராட்டத்தின் குறைகளைக் கண்டறியவும், கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்காவிடம் காலிமுகத்திடல் ஆர்வலர்களுக்கு மலசலகூடம் கட்டித்தரும்படியும் சொல்லி ,  போராட்டத்தை கேலி செய்வது போல் ஒப்படைத்தார். மேயர் வீட்டில் லட்சக்கணக்கில் செலவு செய்து கழிவறை கட்டியதாக குற்றச்சாட்டு ரோசி சேனாநாயக்கவுக்கு ஏற்கனவே உள்ளது. ரணில் , காலிமுகத்திடல்  ஆர்ப்பாட்டத்தை முற்றாக  மழுங்கடித்து அங்கு இளைஞர் நகரமொன்றை உருவாக்க முயல்கிறார்.

இப்போது ரணிலுடன் அந்த வேலையில் ஹரினும் மனுஷாவும் இணைந்துள்ளனர். 

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் கோட்டாபயவுக்கு தொடர்பு இருப்பதாக முதலில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியவர்கள் ஹரீனும் மனுஷாவும்தான்.

அப்படிப்பட்ட கோட்டாவிடம் இருந்து அவர்கள் அமைச்சுப் பதவியை பெற்றது விதியின் திருவளையாடல்தான்.

கோட்டா மீது ஈஸ்ட்டர்  குண்டு  தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டி ஹரினை சிஐடிக்கு அழைக்க கோட்டா முற்பட்ட போது, ​​ பயந்து போன ஹரின்,நவலோக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைக்காக என தங்கிவிட்டார்  . 

அவவேளையில்  ஹரினைப் பார்ப்பதற்காக ரணில் நவலோக வைத்தியசாலைக்குச் சென்றார். 

வஜிர மற்றும் மணுசவும்  சென்றனர். 

அங்குதான் டீல் (ஒப்பந்தம்) தொடங்கியது. 

அன்றிலிருந்து ஹரினும் மனுஷாவும் ரணிலைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தனர். 

ஜேக் ஹோட்டலில் அளுத்கமகேயும் ஹரீனும் மனுஷாவும் டீல் ஒன்றை செய்துள்ளதாக  இணையத்தளங்கள் செய்தி வெளியிட்ட நேரத்தில் ,  ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக அமைச்சர் அளுத்கமகேவுடன்   ,  ஹரீனும்  ,  மனுஷாவும் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் கிராமங்களில் குழந்தைகளின்  சிங்கள குழந்தைகளது பாடல் ஒன்று பிரபலமானது. 

‘ஆட்டை  தின்ன வந்தேன்….’ என்ற வரிகளுடைய அந்த பாடல் பிரபலமானது.

ஆடு போல்  உள்ள சக  நண்பனை ,  கையால் சங்கிலி போல் அரணாகி  , ஆட்டைத் தின்ன வரும் பகைவனை உள்ளே  குதிக்காமல் தடுப்பது  விளையாட்டின் அடிப்படையாகும். 

ஆட்டை  சாப்பிட வந்தேன்… என சிறுத்தையாக ஒருவர் உள்ளே நுழைய முற்படுவார்

அதை சங்கிலி போல தடுப்போர் கூட்டம்

ஆட்டு  புளுக்கை சாப்பிடு ….. என சொல்லிக் கொண்டு தடுப்பார்கள்.

அதேபோல
ரணிலுக்கும் அதே பாடலை நினைவுபடுத்த வேண்டும்.

‘போராட்டத்தை  சாப்பிடவே வந்தேன்

ராஜபக்சவின் புளுக்கையை  சாப்பிடு  ”

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.