முதல் குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி.

15வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 89 ரன்களும், சஞ்சு சாம்சன் 47 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான சஹா டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் 35 ரன்கள் எடுத்தார். இதன்பின் வந்த மேத்யூ வேட் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதனையடுத்து கூட்டணி சேர்ந்த ஹர்திக் பாண்டியா – டேவிட் மில்லர் ஜோடி போட்டியின் முக்கியத்துவம் மற்றும் தன்மையை உணர்ந்து, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 19வது ஓவரை வீசிய மெக்காய் அந்த ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததால் கடைசி ஒரு ஓவருக்கு 16 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை குஜராத் அணிக்கு ஏற்பட்டது.

கடைசி ஓவர்களில் தனது துல்லியமான பந்துவீச்சால் மிக குறைவான ரன்களே கடந்த போட்டிகளில் வழங்கியிருந்த பிரசீத் கிருஷ்ணா, இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரை எதிர்கொண்ட டேவிட் மில்லர், அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸர் விளாசியதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதி போட்டிக்குள் கெத்தாக கால் பதித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.