நாட்டின் முதல் ஹெட்ரோலோகஸ் கோவிட் தடுப்பூசி – கோர்பேவாக்ஸ் பூஸ்டருக்கு அனுமதி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரிக்கும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்ட்ர் டோஸ் தடுப்பூசியாக பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இனி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இந்தியாவின் முதல் ஹெட்ரோலோகஸ் கோவிட்-19 தடுப்பூசி என்ற பெருமையை கோர்பேவாக்ஸ் பெறுகிறது.

ஹெட்ரோலோகஸ் தடுப்பூசி விளக்கம்

ஏற்கனவே முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி எது செலுத்தியிருந்தாலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோர்பேவாக்ஸை செலுத்திக்கொள்ளலாம். இதுவே இந்த ஹெட்ரோலோகஸ் தடுப்பூசியின் சிறப்பம்சம். இதுவரை ஏற்கனவே தடுப்பூசி டோஸ் செலுத்திய நிறுவனத்தின் தடுப்பூசிகளையே அடுத்தடுத்த முறை செலுத்திக் கொள்ள வேண்டும். இவை ஹோமோலோகஸ் தடுப்பூசிகள் வகையைச் சார்ந்தவர். இவற்றின் பயன்பாடு தான் நாட்டில் இதுவரை இருந்து வந்தது.

கடந்த டிசம்பர் மாதமே இந்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த நிலையில், 5-12, 12 முதல் 14 ஆகிய வயதினருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேவேளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான பரிசோதனையில் இந்நிறுவனம் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பூஸ்டர் டோஸ்சுக்கு அனுமதி கிடைத்துள்ளது. தனியார் மருத்துமனை மற்றும் மையங்களில் ஒரு டோஸ் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி ரூ.250 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஹிமா டத்லா கூறுகையில், எங்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நாட்டின் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி தேவையை நாங்கள் பூர்த்தி செய்வோம். இதன் மூலம் நாட்டின் கோவிட் தடுப்பூசி பயணத்தில் புதிய மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம் என்றார்.

இந்தியாவில் மூன்று மாதத்திற்கு பின் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினசரி பாதிப்பு பதிவாகியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.