முறைகேடாக பணம் வசூல் புகார்: கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக பியூஷ் மானுஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் ஆகியோர் பாஜக ஆதரவாளரும், யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரில் பதிவான வழக்கில் மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரிய கார்த்திக் கோபிநாத் மனுவையும், அவரை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையின் மனுவையும் தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறையும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்தும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கார்த்திக் கோபிநாத்தின் மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நன்கொடை வசூலை தொடங்கிய மூன்று நாட்களிலேயே 33,28,924 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்கு பிறகு யாரும் நன்கொடை அனுப்ப வேண்டாமென அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிதியை பராமரிக்க திருப்பணி கணக்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதை கோவில் பணிகளுக்கு தவிர வேறு நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது என்றும், அப்படி பயன்படுத்தியதற்கான காரணங்களை தெரிவிக்காமல் கோவில் செயல் அலுவலர் அளித்த புகார் மீது விசாரணை நடத்தாமலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மனு மீது வாதிட்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிதிலமடைந்த கோயிலின் காட்சிகளை வெளியிட்டு, மக்களிடம் அனுதாபம் தேடி பணம் வசூல் செய்துள்ளதாகவும், 5 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் கடைசி வழக்கில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் வசூலிக்க அறநிலையத் துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார்.

வசூலித்த பணத்தில் 2 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், அவருக்கு உடைந்தயாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தனிப்பட்ட கணக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், கோவிலுக்கு நன்கொடை வசூலிக்க தொடங்கியதும் அவரது கணக்கில் கூடுதல் பணம் வந்துள்ளதாகவும், மிலா ஆப் மூலம் பணம் வசூலித்ததே குற்றம் தான் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கார்த்தி கோபிநாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிதிலமடைந்த கோவிலை சரி செய்ய கோரிக்கை விடுத்ததை ஏற்று மக்கள் பணம் அளித்ததாகவும், கோயிலை சரி செய்ய அரசு முயற்சிக்கவில்லை எனவும், அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படையாக நடந்ததாகவும், முறைகேடுக்கு வாய்ப்பில்லை எனவும், பணம் கொடுத்தவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை எனவும் வாதிட்டார்.

கார்த்தி கோபிநாத் தனது சொந்த பணத்தையும் வழங்கியுள்ளார் எனவும் வசூல் செய்யப்பட்ட பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட அவரால் எடுக்க முடியாது எனவும், தனிப்பட்ட கணக்கை இதில் குறிப்பிடக்கூட இல்லை எனவும், 33 லட்சம் ரூபாய் மொத்தமாக மிலா ஆப்பில் தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நன்கொடை அளித்தவர்கள் விவரங்களை மிலா ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும், பணம் என்னுடைய பொறுப்பில் இல்லை எனவும், பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் படி 3 மணி நேரம் விசாரணை நடத்தி, எந்த தவறும் செய்யவில்லை என காவல்துறையினர் கூறிவிட்டதாக கார்த்திக் கோபிநாத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை (ஜூன் 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.