தம்மிக்க தேசிய பட்டியலில் வர முடியாது : பாக்கியசோதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமித்த தீர்மானத்தை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் (CPA) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியலமைப்பின் சரத்து 99 (ஆ) இன் படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்தால், அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்படும் நபர், அதே கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட தொடர்புடைய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளரோ அல்லது தேசியப் பட்டியலில் யார் நியமனம் பெறுவார்கள் என ஏற்கனவே பெயர் குறிப்பிட்ட நபரோ மட்டுமே இடம்பெற முடியும்.

இதன்படி மேற்படி பட்டியல் எதிலும் வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் பெயர் இடம்பெறவில்லை. இதன்படி, அரசியலமைப்பின் 99 (ஆ) சரத்தின் கீழ் அவர் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர்.

வர்த்தகர் தம்மிக்க பெரேரா பல்வேறு துறைகளில் பல வர்த்தக நிறுவனங்களை வைத்துள்ளார். அவர் எப்படியாவது நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ ஆகிவிட்டால், கட்சி சார்பிலும், நலன்களிலும் முரண்பாடு ஏற்படலாம்.

அத்தகைய நபர் அரசியலமைப்பின் 99 (பி) (இ) பிரிவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர். இதன்படி, தம்மிக்க பெரேராவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமை சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் முரணானது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறும், தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை அடிப்படை உரிமை மீறலாக அறிவிக்குமாறும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் கோரியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.