அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டம்.. பாதுகாப்பு வளையத்தில் ரயில் நிலையங்கள்

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பீகார், உத்தர பிரதேசம் ரயில் நிலையங்கள் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டன. தடையை மீறி பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜன்தர் மந்தரில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சிவாஜி பாலத்தின் அருகே ரயிலை மறிக்க முயன்ற அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிக ரயில் எரிப்புகளுக்கு ஆளான பீகார் தலைநகர் பாட்னாவில், ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பாட்னாவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்

இதேப்போல் ராஞ்சியில் ரயில் நிலையத்தில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டருந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பதினொன்றம் வகுப்பு தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டன.

பஞ்சாப்பிலும் ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தின் பல இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டது. ஹவுரா பாலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

உத்தர பிரதேசத்தின் கோராக்பூர், வாரணாசி உள்ளிட்ட இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு ஏற்கெனவே எச்சரித்திருந்தது. சென்னை ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை நடைமேடை டிக்கெட் வழங்குவதை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர்.அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ரயில் நிலையம் முன், போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே அக்னிபத் திட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை மாதம் முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விமானம் மற்றும் வெடிமருந்து பரிசோதகர்கள், கிளார்க், ஸ்டோர் கீப்பர் ஆகியோருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அக்னிவீர் வர்த்தகருக்கு 8- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கல்வித் தகுதி நிர்ணயக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.