வவுணதீவு பொலிஸ் மீது தாக்குதல்; 6 பெண்கள் உட்பட 12 பேர் மறியலில்….

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துமடு – பாவக்கொடிசேனைப் பிரதேசத்தில் கசிப்பு விற்பனை செய்துவரும் வீடு ஒன்றை முற்றுகையிட்டு கசிப்பு வியாபாரியை கசிப்புடன் கைதுசெய்ய முற்பட்டபோது அங்கிருந்த குழு ஒன்று பொலிஸார் மீது மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அதேவேளை, பொலிஸ் வாகனத்தை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக 6 பெண்கள் உட்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த அப்புகாமி தெரிவித்துள்ளார்.

வவுணதீவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று முற்பகல் 11 மணியளவில் குறித்த வீட்டை முற்றுகையிட்டு அங்கு கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை 2 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்புடன் கைதுசெய்தனர்.

கைதான இளைஞரை ஜீப் வாகனத்தில் ஏற்றுவதற்குப் பொலிஸார் முற்பட்டபோது குறித்த இளைஞரின் சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் அடங்கிய குழுவினர் அவரை ஜீப் வாகனத்தில் ஏற்றவிடாது பொலிஸாரைத் தடுத்தனர்.

இதையடுத்துப் பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே இழுபறி இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது குறித்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த நிலையில் அவரைப் பொலிஸார் சுற்றிவளைத்து மீண்டும் பிடித்தனர்.

கைதான இளைஞர் ஜீப் வாகனத்தில் ஏற்றப்பட்டதையடுத்து பொலிஸார் மீது இளைஞரின் உறவினர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் பொலிஸார் ஒருவர் காயமடைந்ததுடன் ஜீப் வாகனத்தின் கண்ணாடிகளும் உடைந்து சேதமடைந்தன.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அதேவேளை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸாரின் ஜீப் வாகனத்தை உடைத்துச் சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 6 பெண்கள் உட்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஏற்கனவே கசிப்பு கடத்தல் மற்றும் வியாபாத்தில் ஈடுபட்ட இரு சம்பவங்களில் கைதுசெய்யப்பட்டு தண்டப்பணம் செலுத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.