5 நாள்கள் 50 மணிநேரம் – ராகுல்காந்தியிடம் விசாரணையை நிறைவு செய்த அமலாக்கத்துறை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணையை நிறைவுசெய்துள்ளனர். மொத்தம் 5 நாட்களில் 50 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கையகப்படுத்தியதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் கடந்த 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 27 மணிநேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 20ஆம் தேதி விசாரணை நடத்திய நிலையில், 5ஆவது நாளாக நேற்று காலை 11.15 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் ஆஜரானார். அப்போது, இரவு 8 மணிக்கு மட்டும் அரை மணிநேரம் ஓய்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு, நள்ளிரவு வரை விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து, விசாரணையை நிறைவுசெய்த அமலாக்கத் துறையினர், மீண்டும் சம்மன் கொடுக்கவில்லை. இதன்மூலம், ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 50 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை அமலாக்கத் துறையினர் எழுப்பியுள்ளனர். இதே வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நாளை ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆஜராவாரா அல்லது அவகாசம் கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின.

இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, 2010ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது. இதனிடையே, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.