12 வருடத்தின் பின் விடுதலையான கைதிக்கு 55 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கியது அரச தரப்பு.

12 வருடங்களின் பின்னர் நிரபராதி என்று விடுதலையான கைதிக்கு நட்டஈடு வழங்கக் கோரி அரசுக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவால் மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து 55 இலட்சம் ரூபா இழப்பீடு அரச தரப்பால் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கைதிக்கு நட்டஈடு வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

கொழும்பு – 8, பொரளை பொலிஸ் நிலையத்துக்குப் பின்புறமாக இரகசியமாக இயக்கப்பட்ட புலனாய்வுப் பிரிவில் புலனாய்வு அதிகாரியாகச் சேவையாற்றி வந்த துர்யலாகே தர்மதாச 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கைதுசெய்யப்பட்ட அரச புலனாய்வுத்துறை அதிகாரியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்திய பின்னர் அவருக்கு எதிராக RDX 23 கிராம் தனி உடமையில் வைத்திருந்தமை, 35 துப்பாக்கி ரவைகள் மற்றும் 8 சயனைட் வில்லைகளை தனி உடமையில் வைத்திருந்தமை மற்றும் பாதுகாப்பு இரகசியங்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் உளவுத் துறைக்கு வழங்கியமை என மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச் சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

12 வருடங்களாக நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் அரச தரப்பினதும், எதிராளி தர்மதாச சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவினதும் வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டிஆராச்சி, தனது தீர்ப்பில் எதிராளி தரப்பு வாதத்தை கவனத்தில் கொண்டு எதிராளி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்க தவறியுள்ளமையால் எதிராளியான முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியை 2019ஆம் ஆண்டு விடுதலை செய்து அறிவித்தார்.

2019ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட தர்மதாச சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா பொலிஸ்மா அதிபர், களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ், சிறைச்சாலைப் பொறுப்பதிகாரி, சிறைச்சாலை அத்தியட்சகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரைப் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிட்டு அரசமைப்பின் 17 மற்றும் 126 ஆம் உறுப்புரைகளுக்கு அமைய உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த தர்மதாச சிறுநீரகக் கோளாறால் அவஸ்தைப்பட்டுள்ளார். ஆனால், அதனைச் சிறை அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. சிகிச்சை அளிக்காமல் கைதியை நோயில் துடிக்க விடுவது கூட கோரமான சித்திரவதைதான். விளக்கமறியலில் இருந்தபோது தர்மதாச அடிக்கடி சுகவீனம் அடைந்துள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையாலேயே அவரின் நோய் தீவிர நிலைமைக்குச் சென்றுள்ளது. இப்போது அவரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இரத்தச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மனுதாரருக்கு உரிய சிகிச்சையும், பராமரிப்பும் வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான மோசமான நிலையை அடைந்திருக்கமாட்டார். தர்மதாசவின் இந்த நிலைக்குப் பொலிஸாரும், சிறைச்சாலை தரப்பினரும், சட்டமா அதிபருமே காரணம். எனவே, நீதியான நிவாரணம் வேண்டும்” – என்று கோரப்பட்டிருந்தது.

அத்துடன், அந்த மனுவில் மேலும், “ஒரு நிரபராதியான நேர்மையான பொலிஸ் உத்தியோகத்தரை 12 வருடங்கள் சிறை வைத்திருந்து அவரின் எதிர்காலத்தையே இருளாக மாற்றிவிட்டது அரசு. தர்மதாச குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட போதும் அவரை மீளவும் பொலிஸ் பதவியில் அமர்த்தவோ நஷ்டஈடு வழங்கவோ எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அவர் சிறையில் இருந்தபோது மாமியாரின் ஓய்வூதியப் பணமே தர்மதாசவின் பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் வாழ்க்கையைக் கொண்டு செல்ல உதவியது. தர்மதாச விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட பொலிஸ் வேலை மீளக் கிடைக்காமையால் தொடந்தும் அவரது குடும்பம் மாமியாரின் ஓய்வூதியப் பணத்தையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியிருக்க வேண்டிய அவலம் தொடர்கின்றது” – என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தர்மதாச 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்ததையடுத்து தர்மதாசவின் மனைவியான சந்தியா தமயந்தி மனுதாரராகப பெயரிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றில் விசாரணைக்குத் திகதி குறிப்பிடப்பட்டிருக்கையில், இம்மாதம் 24ஆம் திகதியிடப்பட்டு தர்மதாசவின் மனைவிக்கு 55 இலட்சத்து 23 ஆயிரத்து 808 ரூபாவுக்கான காசோலை அரச தரப்பால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.