ஒட்டுமொத்த மக்களையும் ஒரே சவக்குழிக்குள் புதைக்கும் ஜனாதிபதியாகத் திகழும் கோட்டா! கூட்டமைப்பின் எம்.பி. ஜனா சாடல்.

“2009ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்த கோட்டாபய ராஜபக்ச, இன்று இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் ஒரே சவக்குழிக்குள் புதைக்கும் ஜனாதிபதியாகத் திகழ்கின்றார்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டுக்குச் சாபக்கேடு எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு எரிபொருள், எரிவாயு, மின்சாரம், உணவுப்பொருட்கள், பால்மா என பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் என்பது மிக முக்கியமான தேவையாகக் கருதப்படுகின்றது. எரிபொருள் இல்லாவிட்டால் நாடு ஸ்தம்பிதம் அடையும் நிலைக்குத் தள்ளப்படும்.

உணவு உற்பத்தி, விநியோகம், போக்குவரத்து உட்பட அனைத்து விடயங்களும் எரிபொருளை அடிப்படையாக வைத்துத்தான் நடைபெறுகின்றன.

அத்தியாவசிய சேவையை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த அத்தியாவசிய சேவைகளுக்குள் உணவு விநியோகம், சுகாதாரம், விவசாயம் என்பன உட்படுத்தப்படுவது அவசியம் என்றாலும் இந்தத் தேவைகளுடன் இணைத்து சிறு வியாபாரிகளும் அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கப்படவேண்டும்.

இன்று சிறு வியாபாரிகள், மீனவர்கள், ஓட்டோ சாரதிகள், கூலித்தொழில் செய்வோர் போன்றோர் அன்றாடம் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஓட்டோ சாரதிகள் ஓட்டோவைத் தவணை முறை அடிப்படையில் வங்கிகளிலும் லீசிங் நிறுவனங்களிலும் பெருமளவு கடனில் பெற்றவர்கள். இவர்களின் தேவை நாட்டுக்கு முக்கியமாகவுள்ள நிலையில் அவர்கள் இன்று தமது குடும்பத்தையே கொண்டு நடத்த முடியாத நிலைக்கு இந்த எரிபொருள் பிரச்சினை தள்ளியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மீன்பிடி, விவசாயத்தையே அதிகளவில் நம்பியுள்ளனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களும் அதிகளவில் இந்த மாவட்டத்தில் வாழ்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றாடம் கூலித்தொழில் ஈடுபடும் மக்கள் தமது தொழிலை சிரமமின்றி மேற்கொள்வதற்கான முன்னுரிமை வேலைத்திட்டத்தினை அரச அதிபர் முன்னெடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நிர்வாகச் செயற்பாடுகள் சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

இன்று கிராமப்புற பாடசாலைகளை நடத்துமாறு அரசு கூறுகின்றது. கிராமத்துக்குச் செல்லும் ஆசிரியர்கள் அங்கு வசிப்போர் அல்லர். பல கிலோமீற்றர் தூரமிருந்து செல்பவர்கள் உள்ளனர். பொதுப்போக்குவரத்துக்கூட இல்லாத பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் எவ்வாறு கடமைக்கு செல்வார்கள்?

இதேபோன்று தனியார் வகுப்புக்களைக் குறிப்பட்ட நாளைக்கு நிறுத்துமாறு மாவட்ட அரச அதிபர் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களை அழைத்து அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இந்த நாட்டின் அரசால் இந்தியாவிடம் எரிபொருட்கள் ஒரு கால கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டன. அந்தக் கடன்திட்டம் முடிவடைந்துவிட்டது என அரசு கூறுகின்றது. அடுத்த கப்பல் எப்போது வரும் என்று தெரியாது என எரிபொருள் அமைச்சர் கூறுகின்றார். ஆனால், இந்த அமைச்சர் கட்டாருக்கு எரிபொருள் கடன் கேட்டுச் சென்றுள்ளார்.

பெற்றோல் இந்த நாட்டில் முடிவடைந்த பின்னரே இவர்கள் பெற்றோல் கடன் கேட்டுச் செல்கின்றனர். இவ்வாறு முகாமை செய்யத் தெரியாத அமைச்சர்களும் ஜனாதிபதியும் இந்த நாட்டுக்குத் தேவையா?.

இந்த நாட்டின் அரச தலைவராகவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டுக்குச் சாபக்கேடு. இவர் தனிமனிதனாக இந்த நாட்டு மக்களை சவக்கிடங்குக்குள் புதைக்குமளவுக்குச் செயற்பட்டு வருகின்றார். 2009ஆம் ஆண்டு இறுதிப் போர்க்காலத்தில் முள்ளிவாய்க்கால் என்னும் சிறிய நிலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மக்களைக் கொன்று குவித்த கோட்டாபய ராஜபக்ச, இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஒரே சவக்குழிக்குள் புதைக்கும் ஜனாதிபதியாகத் திகழ்கின்றார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.