177 பவுண் நகைளைக் கொள்ளையிட்ட பெண் உட்பட 4 பேர் வசமாகச் சிக்கினர்.

நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய 177 பவுண்களைக் கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்கள், சம்பவம் இடம்பெற்று 6 மாதங்களுக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டனர்.

நோர்வூட் நகரப் பகுதியில் வாழும் மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே ஹட்டன் பொலிஸின், ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதியன்றே கடை உடைக்கப்பட்டு தங்க நகைகள் களவாடப்பட்டன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வேலை செய்த பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது கைரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய பெண்ணின் கைரேகையும் மீட்கப்பட்ட பொருட்களில் உள்ள கைரேகையும் ஒரே மாதிரியானவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்பின்னர் விசாரணை வேட்டை ஆரம்பமானது. களவாடப்பட்ட நகைகளை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளையிலேயே, சூத்திரதாரிகள் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.

54 தங்கச் சங்கிலிகள், 757 தோடுகள், 177 பெண்டனர்கள், 18 வலையல்கள், 1 தங்க நெக்லஸ் உட்பட மேலும் சில தங்க நகைகளே கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

கைதானவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்காக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.