ரவுடிகளுக்கு சிகரெட் பாக்கெட்டுகளை விற்க உதவி பங்குபோட்ட போலீஸ் – 4பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை

கட்டடம் யாருக்கு சொந்தமானது என்ற பிரச்சனையில் தலையிட்ட ரவுடிகள் அள்ளிச்சென்ற சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்து கிடைத்த ரூ.20 லட்சத்தை பங்கு போட்டு கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் மூன்று துணை ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருப்பதி சீனிவாசபுரத்தில் உள்ள இரண்டு அடுக்குமாடி கட்டிடம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவருக்கு சொந்தமானது. அந்த கட்டடத்தை சென்னையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்து பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சிகரெட் பாக்கெட்டுகள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை ஏஜென்சி எடுத்து மொத்த வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், குடோனை காலி செய்யுமாறு நிஷாந்த் கேட்டுள்ளார். ஆனால், முத்துக்குமார் குடோனை காலி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். இதனால், நிஷாந்த் அதேபகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரான சட்டக்கல்லூரி மாணவர் மணிகண்டா(29) என்பவரிடம் சிகரெட் ஏஜென்சி செயல்பட்டு வந்த அந்த கட்டடத்தை விற்பனை செய்து கொடுக்கும்படி கூறினார்.

இந்த நிலையில் அந்த கட்டிடம் அதே பகுதியில் வசிக்கும் டாக்டர் ரெஹ்மானுக்கு என்பவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னரும் அடாவடியில் ஈடுபட்ட முத்துக்குமார் இந்த கட்டிடம் எனக்கு சொந்தமானது. என்னிடம் அதற்கு தேவையான ஆவணங்கள் உள்ளன என்று கூறி கட்டிடத்தை காலி செய்ய மறுத்தார்.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் 9ஆம்தேதி மணிகண்டா திருப்பதியை சேர்ந்த இர்பான், மங்களம் பகுதியை சேர்ந்த சீனிவாஸ் மற்றும் சில ரவுடிகளை அழைத்து சென்று குடோனில் இருந்த சிகரெட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை வீதியில் தூக்கி எறிந்து அடாவடியில் ஈடுபட்டு காலி செய்ய வைத்தார் . அப்போது, குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை ரவுடிகள் அள்ளிச் சென்றனர். தொடர்ந்து திருச்சானூர் காவல்துறை துணையுடன் சிகரெட் பாக்கெட்டுகள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.

அந்த பணத்தை திருச்சானூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம், துணை ஆய்வாளர் வீரேஷூ, ராமகிருஷ்ணா, மற்றொரு ராமகிருஷ்ணா ஆகியோர் ரவுடிகளுடன் சேர்ந்து பங்கு போட்டு கொண்டனர். இந்த அடாவடி பற்றி சிகரெட் ஏஜென்சி நடத்தி வரும் முத்துக்குமார் திருப்பதி எஸ்பி பரமேஸ்வரிடம் புகார் அளித்தார். இதுபற்றி எஸ்பி உத்தரவின்பேரில் புத்தூர் டிஎஸ்பி விசாரணை நடத்தினார். அப்போது ரவுடிகள் மணிகண்டா, இர்பான், சீனிவாஸ் ஆகியோர் அள்ளி சென்ற சிகரெட்கள் விற்பனை செய்த ரூ.20 லட்சம் பணத்தை எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர் ஆகியோர் ரவுடிகளுடன் சேர்ந்து பங்கு போட்டுக்கொண்டது தெரிய வந்தது.

மேலும் காவல்துறையினர் வன்முறைக்கு துணையாக இருந்ததும், லஞ்சம் பெற்றதும் உறுதியானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் 3 எஸ்ஐக்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.