சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸின் ரூ. 235 கோடி சொத்துகள் முடக்கம்! அம்பலமான முறைகேடு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 235 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு கமர்ஷியல் ஷோரூம் வாங்குவதற்காக இந்தியன் வங்கியில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் 150 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

அதே ஆண்டில் மேலும் 90 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கடன் தொடர்பான சொத்துக்களை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதாகவும், இரண்டாவதாக பெறப்பட்ட 90 கோடி ரூபாய் கடன் மூலம் ஷோரும் வாங்குவதற்காக பெற்ற கடனை அடைக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாகி சிபிஐயில் புகார் அளித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறிப்பாக வங்கியில் கடன் பெறுவதற்காக கூறப்பட்ட காரணங்களுக்காக பணத்தை பயன்படுத்தாமல், முறைகேடாக முதலீடு செய்ததுடன் பல்வேறு விதிமுறைகளை மீறியதும் தெரியவந்துள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த வங்கி மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது கடந்த மே மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

முன்னதாக கடன் தொகை மற்றும் வட்டி 400 கோடி ரூபாயை தாண்டியதால் கடந்த ஜனவரி மாதம் தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸை இந்தியன் வங்கி ஜப்தி செய்தது.

இந்நிலையில் தற்போது அந்நிறுவனத்திற்கு சொந்தமான 235 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.