11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வாகிறார்

சென்னையில் வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வுசெய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வுசெய்வது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக-வில் ஒற்றைத்தலைமை சர்ச்சை நீடித்துவரும் நிலையில், சென்னையில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவதற்கான தீர்மானம் இல்லாததால், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன.

நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதுடன், பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் 11-ஆம் தேதி நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதனை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக் குழு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். எனினும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழை தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் அனுப்பி, கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த இபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கட்சியின் அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது, பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்கி, அதற்கு பொதுக்குழுவிலேயே தேர்வுசெய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் காலை 9.15 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.