கோட்டா அரசை விரட்டியடிக்க ஓரணியில் திரண்டெழுவோம் தமிழ், முஸ்லிம், சிங்களவர்களுக்கு அறைகூவல் விடுத்தார் சம்பந்தன்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவர் தலைமையிலான அரசையும் பதவியிலிருந்து அகற்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டு தொடர்ந்து போராட வேண்டும். இந்த அரசுக்கு எதிராக நாடெங்கும் நாளை நடைபெறும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

“கோட்டா உடன் வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் நாளை கொழும்பிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் அரசுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டத்துக்குச் சஜித் பிரேமதாஸ எம்.பி. தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் முழு ஆதரவை வழங்கியுள்ளன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களும் எதிர்க்கட்சிதானே. நாங்கள் அரச ஆதரவுக் கட்சி இல்லையே. நாங்களும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவே இருக்கின்றோம். ஆனபடியால் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுதான் எங்களுடைய நிலைப்பாடும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, நாட்டுக்கோ – மக்களுக்கோ – தமிழ் மக்களுக்கோ – சிறுபான்மை இன மக்களுக்கோ எவ்விதமான நன்மையையும் செய்யவில்லை. மக்களுக்கு நன்மைகளைச் செய்ய இந்த அரசு முயற்சிக்கவும் இல்லை.

பொருளாதாரப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் தொடர்கின்றது. நாட்டு மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படும் வரை அதாவது தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது.

எனவே, எதையும் செய்ய முடியாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவர் தலைமையிலான அரசையும் பதவியிலிருந்து அகற்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். அனைவரும் ஓரணியில் திரண்டு தொடர்ந்து போராட வேண்டும்.

இந்த அரசுக்கு எதிராக நாடெங்கும் நாளை நடைபெறும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.