ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்த பணத்தை, அபகரிக்க முயலும் தேஷ்பந்து (வீடியோ)

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோத்தபாயவின் மாளிகைக்குள் பிரவேசித்ததையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருந்ததாகக் கூறப்படும் அறையின் அலமாரியில் இருந்து ஒரு கோடியே எழுபத்து எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று கண்டெடுத்தது.

அந்தப் பணத்தை , ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்புப் பணியில் இருந்த விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷேதா பெர்னாண்டோ என்ற அதிகாரியிடம் ஒப்படைக்க பல்கலைக்கழக மாணவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு அவர் தொகையை பெற்றுக் கொள்ளாது, கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகேவிற்கு அறிவித்துள்ளார்.

அதன்படி சாகர லியனகே உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் அங்கு சென்று பணம் கிடைத்த இடத்தை வீடியோ படம் எடுத்து 05 மாணவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து பணத்தையும் பொலிஸ் காவலில் எடுத்தனர்.

நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தின் பின் நேற்றிரவு முதல் காணாமல் போயிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், திடீரென கோட்டை பொலிஸ் நிலைய கட்டளை அதிகாரியை அழைத்து, இன்று காலைக்குள் பணத்தை பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்குமாறும், போலீஸ் புத்தகங்களில் பணம் பற்றி எந்த குறிப்பையும் எழுத வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு கோட்டை காவல் நிலைய அதிகாரி மறுத்ததாகவும், தேஷ்பந்து, “நான் சொன்னதைச் செய்யும்” என்றும் கூறியதாகவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயர் அதிகாரி , தன்னுடன் பேசி அவ்வாறான அழுத்தமொன்றை கொடுத்ததாக பொலிஸ் குறிப்பு ஒன்று எழுதியதோடு, பொலிஸ் தலைமையகத்திற்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

அதன்பின் பொலிஸ் மா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் வெளியாட்கள் எவருக்கும் பணத்தை வழங்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகத்திலிருந்து கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் இளம் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் கையளித்த பணம் தொடர்பில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.