16 வயது சிறுமியிடம் சினைமுட்டை எடுத்த 4 மருத்துவமனைகளும் மூடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சினைமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் அவரது தாய், வளர்ப்பு தந்தை, தரகர் மற்றும் ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றித்தந்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் இறுதி விசாரணை அறிக்கையை அளித்துள்ள நிலையில், சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை உள்ளிட்ட 6 மருத்துவமனைகளும், சிறுமியிடம் சினை முட்டை எடுத்தது தெரிய வந்திருப்பதாக கூறினார்.

21 முதல் 35 வயதுள்ள பெண்ணிடம், ஒரு குழந்தைபேறுக்கு பின்னர், ஒருமுறை மட்டுமே சினைமுட்டை பெறலாம் என்ற விதியை மீறி, 16 வயது சிறுமியிடம், பல முறை சினை முட்டை எடுத்திருப்பதாக அமைச்சர் குற்றம்சாட்டினார்.

ஆதார் அட்டை போலி என தெரிந்தும் 6 மருத்துவமனைகளும் வணிகரீதியாக செயல்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சினைமுட்டை எடுக்கும் முன் சிறுமியிடம், அதனால் ஏற்படும் சாதக பாதகங்களை எடுத்துக் கூறாதது, ஸ்கேன் எடுத்த ஒளி நிழற்படம் சேமிக்கப்படாதது, அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை முறையாக தராதது என விதிகளை மீறி மருத்துவமனைகள் செயல்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

விதிமீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்கள் உடனே மூடப்படும் என்றும், மருத்துமனைகள் மீது சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 6 மருத்துவமனைகளில் தமிழ் நாட்டில் உள்ள 4 மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

செயற்கை கருத்தரிப்பு மையங்கள், மருத்துவ சேவையை, வியாபாரமல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை தொடர்பாக விரிவான நெறிமுறை விரைவில் வெளியிடப்படும் என்றார்.

திருப்பதியில் உள்ள பக்ருத்வா டெஸ்ட் டியூப் பேபி சென்டர் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அந்தந்த மாநில அரசுகளுக்கு, துறை செயலர் மூலம் பரிந்துரை அனுப்பப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.