நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்னதாக சர்ச்சை… தேசிய தேர்வு முகமை விளக்கம்

கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற அதிகாரிகள் நிர்பந்தித்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று முன் தினம் நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டும், மிகக் கடுமையான நெறிமுறைகளை தேர்வு முகமை பின்பற்றி வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் கொல்லம் மாவட்டம், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத சென்ற பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தியுள்ளனர். தேர்வரின் மேல் உள்ளாடையை கழட்ட நிரபந்தித்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். தனது மகளை போல் பிற மாணவிகளையும் உள்ளாடையை கழற்ற சொல்லி நிர்பந்தித்ததாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மைய கண்காணிப்பாளர் மற்றும் சுயாதீன பார்வையாளர் மற்றும் நகர ஒருங்கிணைப்பாளர், கொல்லம் மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவில்லை என கூறியுள்ளனர். தேர்வர் தேர்வும் எழுதியுள்ளார் என தேசிய தேர்வு மையம் கூறியுள்ளது.

தேர்வின்போதே அல்லது தேர்வு முடிந்த பின்னரோ இது தொடர்பாக எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் மேலும் இது தொடர்பாக எந்த மின்னஞ்சலும்/புகாரையும் என்டிஏ பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் தந்தை கூறுவது போன்ற எந்த செயலையும் நீட் தேர்வுக்கான ஆடை விதிகள் அனுமதிப்பதில்லை என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.