கூட்டமைப்பின் தவறுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

“நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுவாக இதுதான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டமை ஆச்சரியமானதல்ல. ஆனால், இந்த முக்கியமான தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றுத் தவறை மீண்டும் செய்துள்ளது.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

‘நடப்பு அரசியலின் யதார்த்தம் புரியாத கூட்டமைப்பின் தலைமைத்துவம் விட்டுள்ள மற்றுமொரு வரலாற்றுத் தவறு’ என்ற தலைப்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு சாடியுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் பொருட்படுத்தாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் அரசியல் ரீதியில் ஒரு சிலரின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியிருப்பது மிகவும் தெள்ளத் தெளிவானது.

இலங்கை அரசியலில் பொறுப்பு வாய்ந்த பதவியில் யார் அமரப் போகின்றார் என்பதல்ல நமது விடயம். வரப்போகும் நபருடன் நமது பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கான வழிமுறையொன்றைக் கண்டடைதல்தான் அரசியல் முதிர்ச்சி. அப்படிப்பட்ட முதிர்ச்சி கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் நடவடிக்கையில் எந்தவொரு இடத்திலும் பிரதிபலிக்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது. சிறுபிள்ளைக்கும் விளங்கும் நடப்பு அரசியல் யதார்த்தம், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தால் புரிந்துகொள்ளப்படாத அதிசயத்தை என்னவென்று சொல்வது?

எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த தமிழ்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வாக்குகள் இப்போது தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுவொன்று குறித்துப் பேசமுடியாத நிலையில் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் தலைமைத்துவம் என்பது காலத்தின் பொருத்தப்பாட்டையறிந்து, அரசியல் நடப்பைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற நிலையில் மக்களுக்குப் பயன்தரத்தக்க நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதோடு, தன்னோடு இணைந்து பயணிக்கும் அனைவரையும் அதே நிலைப்பாட்டில் உறுதியோடும் திருப்தியோடும் நிலைத்திருக்கச் செய்வதாகும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் விட்டுள்ள இந்தத் தவறு ரணிலின் ஆட்சிக்காலத்தில் இனி எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் தமிழர் தரப்பு நெஞ்சு நிமிர்த்தி நின்று எதிர்பார்க்கவும் முடியாது, கேட்கவும் முடியாது செய்துள்ளது.

தவறான மதிப்பீடு மற்றும் தவறான வழிநடத்தல்களால் தமிழ்த் தேசிய இலக்கை அடைய முடியாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இது தொடர்பான உபாயங்களைச் செதுக்கி தமிழர் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எனவே, பொறுப்புக்களைக் கடந்து செல்லாமல், உடனடியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி நடந்த தவறுகளல்ல, தப்புக்களுக்கான காரணங்களை ஆராய்வது மட்டுமின்றி பொறுப்புக்கூற வேண்டியதும் மிகவும் இன்றியமையாதது” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.