மின் கட்டணம் உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் ஜூலை 27ம் தேதியும் பிற மாவட்டங்களில் ஜூலை 25ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவு அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு பிரதான எதிர்க்கட்சிகளும் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமை தாங்குகிறார்.

சென்னையை பொறுத்தவரை அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 9 மாவட்ட கழகங்களும் ஒன்றிணைந்து ஒரே கண்டன ஆர்ப்பாட்டமாக 27ம் தேதி காலை 10மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.