ரணிலைக் கண்டபடி விமர்சிக்காமல் தந்திரோபாயமாக அணுகவேண்டும் – முன்னாள் எம்.பி. சிறிநேசன் வேண்டுகோள்.

“தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைச் சிந்திப்பதைவிடுத்து இப்போது தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கண்டபடி விமர்சித்துக் கொண்டு அல்லது போராடிக்கொண்டிருப்பதில் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்த் தரப்பினர் தந்திரோபாயமான முறையில் ஜனாதிபதியை அணுகி கருமங்களை ஆற்றவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனநாயக ரீதியான போராட்டத்தை நாங்கள் வரவேற்கின்றோம். போராட்டக்காரர்கள் நியாயமாக என்ன கோரிக்கையை முன்வைக்கின்றார்களோ அதை நிறைவேற்றுவதுதான் புத்திசாதுரியமானது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்க்கமான முறையில் சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

தற்போது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இனி அடுத்ததாக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைச் சிந்திப்பதைவிடுத்து இப்போது தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியைக் கண்டபடி விமர்சித்துக்கொண்டு அல்லது போராடிக் கொண்டிருப்பதில் அர்த்தமிருப்பதாக தெரியவில்லை.

தென் பகுதியில் அமைதி வழிப் போராட்டகார்கள், கிளர்ச்சிப் போராட்டக்காரர்கள் என இரண்டு வகையினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது கருமங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களைப் பொறுத்தவரையில் பல விடயங்கள் காணப்படுகின்றன. அதில் குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, போரினால் பாதிக்கப்பட்டவர்கள் விடயம், காணி விடயம், தொல்பொருள் எனும் பெயரில் அத்துமீறல் விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான பல விடயங்கள் இருக்கையில் நாங்கள் இந்தக் கால கட்டத்தில் தந்திரோபாயமான முறையில் ஜனாதிபதியைப் பயன்படுத்தி என்ன செய்யலாம் என்பதைத்தான் சிந்திக்க வேண்டும்.

“நான் சிங்கள மக்களின் வாக்குகளால்தான் வெற்றி பெற்றவன்” எனவும், சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் போவதாகவும் முன்னய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்கு பல்லின மக்களுடன் சேர்ந்து போகக்கூடிய பண்புகள் இருக்கின்றபடியால் இந்தச் சூழ்நிலையை நாங்கள் எப்படிப் பயன்படுத்தே வேண்டும் என்பதுதான் முக்கியமாக இருக்கின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.