5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியுள்ளது.

4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு அதிகத் திறன் கொண்ட 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

ஏலத்தில் பங்கேற்க ஜியோ நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடியை முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. இதில், ஜியோ அதிக அளவிலும், அதானி நிறுவனம் குறைந்த அளவிலும் அலைக்கற்றையை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

‘முதல் நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறும். அதன் பிறகு, ரேடியோ அலைவரிசைகளுக்கான தேவையைப் பொருத்து எத்தனை நாள்கள் ஏலம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்’ என்று தொலைத்தொடா்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஏலத்தில் 600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ், 2500 மெகா ஹொ்ட்ஸ், 3300 மெகாஹொ்ட்ஸ் மற்றும் 26 கிகாஹொ்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளுக்காக ஏலம் நடைபெறுகிறது.

4ஜி அலைக்கற்றையைவிட 10 மடங்கு கூடுதல் இணைய சேவை வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றையை வாங்க ரூ. 70,000 கோடி முதல் ரூ. 1 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் செலவிடும் என்று தொலைத்தொடா்புத் துறை நிபுணா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இந்த ஏலத்தில் பங்கேற்க செலுத்த வேண்டிய முன்பண வைப்பு (இஎம்டி) தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 14,000 கோடியை செலுத்தியுள்ளது. பாா்தி ஏா்டெல் நிறவனம் ரூ. 5,500 கோடியும், வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 2,200 கோடியும் இஎம்டி செலுத்தியுள்ளன. அதே நேரம், அதானி நிறுவனம் ரூ. 100 கோடி அளவில் மட்டுமே வைப்பு வைத்துள்ளது. இதன் மூலமாக, இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னணியில் இருக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில், ஒரு நிறுவனம் ஏலம் எடுக்கக் கூடிய அலைக்கற்றையின் அளவை இஎம்டி தொகையே பிரதிபலிக்கும். அந்த வகையில், ஒரு தனியாா் நெட்வொா்க்கை அமைப்பதற்குத் தேவையான மிகக் குறைந்த அளவிலான 5ஜி அலைக்கற்றைகளையே அதானி நிறுவனம் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்றும் சந்தை நிபுணா்கள் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.