புதிய மக்கள் ஆணையைப் பெற்ற அரசே நாட்டுக்கு மிகவும் அவசியம் -சஜித் வலியுறுத்து.

நாட்டு மக்களுக்கு வாழ்வது கூட பிரச்சினையாகியுள்ள இத்தருணத்தில் தற்போதைய அரசு அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசியல் சூதாட்டத்தின் ஊடாக எண்ணெய், எரிவாயு, பால்மா, உரம் போன்ற அனைவரது பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை.

தீர்வுகள் இல்லாத நாட்டுக்கு அரசியல் சூதாட்டம் பதிலாக இருக்கக் கூடாது. இந்த அரசியல் சூதாட்டம் சீரற்ற அரசியல் கலாசாரத்தின் பண்பாகும்.

இந்நிலையிலிருந்து விடுபட புதிய அரசே நாட்டுக்கு தேவை. ஒப்பந்தங்களின் மூலம் அன்றி மக்கள் அபிப்பிராயத்தின் ஊடான புதிய மக்கள் ஆணையை அந்த அரசு பெற வேண்டும்.

220 இலட்சம் மக்கள் தனது வாழ்க்கையை இழந்துள்ள இவ்வேளையில், அரசியல் தலைகள் மாறுதல், இசை நாற்காலி போட்டிகள், அமைச்சர்கள் மாற்றம் என பேரம் பேசும் கலாசாரம் நிலவி வருகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் இந்த நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தற்போதைய அரசால் முடியவில்லை.

அரசு தனது இருப்பைக் காக்கவே முன்னுரிமை அளிக்கின்றது. நாட்டு மக்களின் வாழ்க்கையை ஸ்திரப்படுத்தல் தொடர்பில் இந்த அரசுக்கு எந்த எண்ணமும் இல்லை.

உலக வங்கி, பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம், சமந்தா பவர் போன்ற பல்வேறு இராஜதந்திரிகள், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் ஸ்திரத்தன்மை வலுவாக இருக்க வேண்டும் என்றும், பல்வகை பொருளாதாரக் கட்டமைப்பு நடைமுறையில் இருக்க வேண்டும் என்றே குறிப்பிடுகின்றனர். எனினும், இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதை விடுத்து அரசின் பிரதிநிதிகள் கடந்த மாதங்களில் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப புதிய மக்கள் ஆணையின் மூலமே முடியும். இதன்படி மரியாதைக்குரிய மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள் கோரும் புதிய மக்கள் ஆணையைப் பெற வேண்டும்.

இந்த அரசியல் சூதாட்டம் நிறுத்தப்பட வேண்டும். பதவிகளை பரிமாற்றம் செய்வதால் 220 இலட்சம் மக்களின் துயரங்களுக்கும் கண்ணீருக்கும் தீர்வு கிடைக்காது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.