மேல் மாகாண சுகாதார வீரர்களுக்கு “கொரோனா கொடுப்பனவு கிடைக்கவில்லை“ – ஹரித அலுத்கே

கொரோனா வைரஸை எதிர்த்து திறமையான சேவையை வழங்கிவரும், மேல் மாகாண வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகளை அரசாங்கம் செலுத்தத் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது.

மேல் மாகாணத்தின் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து எந்தவிதமான கொடுப்பனவுகளையும் அரசு வழங்கவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

“இதில் வைத்தியர்களுக்கான மேலதிக கடமைக்கான கொடுப்பனவு, விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள், ஆய்வுக் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கான மேலதிக நேரம் மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் ஆகியவை அடங்கும்.” என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் தங்கள் மாத சம்பளத்துடன் இந்த கொடுப்பனவுகள் கிடைக்காததால் ஒட்டுமொத்த சுகாதார ஊழியர்களும் கடுமையான சிரமங்களை எதிர்நோக்குவதாக, அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கேயின் கையெழுத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமைத் தொடர்பில், மேல் மாகாண ஆளுநர், மாகாண அதிகாரிகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சக அதிகாரிகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டதாகவும், எனினும் அதிகாரிகள் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தொழிற்சங்கம் மே 28ஆம் திகதி ஆளுநரை சந்தித்தபோதிலும், பிரச்சினைக்கு சரியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஜூன் முதலாம் திகதிக்குள் கொடுப்பனவுகளை செலுத்துவதாக, மாகாண ஆளுநர் வாக்குறுதி அளித்ததாகவும், எனினும் அந்த வக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு திறைசேரி மாகாண சபைக்கு நிதியை வழங்க வேண்டுமெனவும் அல்லது சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார அமைச்சுக்கு நிதியை வழங்க வேண்டுமெனவும், அரச வைத்திய அதிகாரிககள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகள் தொடர்ந்து தாமதப்படுத்தும் பட்சத்தில், நிர்வாக சபையைக் கூட்டி, தீர்மானம் மேற்கொண்டு, மேல் மாகாணத்தில் தொழில்முறை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாண சபைக்குச் சொந்தமான சுகாதார நிறுவனங்களில் மாத்திரம் சுமார் 2,500ற்கும் அதிகமான வைத்தியர்கள் கடமையாற்றி வருகின்றனர். ஏனைய சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் காணப்படுவதாக அந்த சங்கம் வலியுறுத்துகிறது.

மேல் மாகாணத்தில் பணியாற்றும் சுகாதார வீரர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பது அதிகாரிகளின் கடமையும் பொறுப்புமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுக்கே ஊடக அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.