அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி காலமானார்! (Video)

அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி, மும்பையில் இன்று காலமானார்.

தமிழக மக்களின் 90 காலகட்டங்கள் ‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி’ என்ற கம்பீரக் குரலை கேட்காமல் விடிந்திருக்காது. அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர், டெல்லியில் 35 ஆண்டுகள் ஒளிபரப்புத்துறையில் பங்காற்றினார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிந்திய இணைப்பு

அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி காலமானார்!

`செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி‘ என்று கேட்டு எழும் காலம் இருந்தது. அகில இந்திய வானொலி மூலம் அவர் அடைந்த பிரபலம் உச்சம் .ஒலிபரப்புத் துறையில் அவர் செய்த ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக 2009 ஆம் ஆண்டில் சரோஜுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கியது.அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான சரோஜ், ஒளிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக இருந்தார். புதுதில்லியில் 35 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, ஒளிபரப்புத் துறைக்கு பங்களித்து வந்தார்.தமிழ் படங்கள், திரைப்படங்கள் பிரிவு ஆவணப்படங்கள் மற்றும் செய்தி இதழ்கள் ஆகியவற்றிற்கு குரல் கொடுப்பதைத் தவிர, தமிழ்த் திரைப்படங்களுக்கு சப்-டைட்டில் மற்றும் ஸ்பாட்டிங் (ஆங்கிலத்தில்) ஆகியவற்றில் அவரது பங்களிப்பு இருந்தது.அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர் இன்று நம்மிடையே இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

ஆம்.. அகில இந்திய வானொலியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.

1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் முற்பகுதியிலும் பிறந்தவர்களுடைய முக்கிய பொழுதுபோக்கு என்பது விளையாட்டைத் தவிர்த்து வானொலி (Radio) கேட்பதாகவே இருந்திருக்க முடியும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தவர்களின் வாழ்வோடும் வானொலி நேரடித் தொடர்பில் இருந்தது. வானொலி நிகழ்ச்சியில் முக்கியமானது, மறைந்த தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ’இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சி. வானொலிக்கென ஒரு தனிப்பட்ட பேச்சு வழக்கு மொழி பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தில் எளிய தமிழில் பக்கத்து வீட்டுக்காரரின் பாவனையுடன் வட்டார வழக்கில் தினமும் ஒரு தகவலை மிக சுவாரஸ்யமாக சொல்லுவார்.

அதை அடுத்து”ஆகாசவாணி! செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி ” இதைப் படிக்கும் போது மனம் காலை ஏழே கால் மணி பரபரப்பை உணர்ந்தது. அந்த நேர ஸ்கூல் , கல்லூரிக்கு செல்லும் பரபரப்பு , அடுக்களையிலிருந்து மிதந்து வரும் சாம்பார் கொதிக்கும் மணம் எல்லாமே நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாது.. அவரை ஒரு முறை சந்தித்த போது , “ எல்லோரும் ‘Male வாய்ஸ் மாதிரி உனக்கு இருக்கே’ன்னு சொல்வாங்க. அவங்களுக்கெல்லாம் என்னுடைய பதில் ஆமா, என் குரல் மேலான வாய்ஸ்தான்!” என்று பெருமை பொங்க சொன்னார்

மேலும் அவர் சொன்னது:

பூர்வீகம் தஞ்சாவூர். ஆனா, பிறப்பு, படிப்பு எல்லாமே மும்பைல. புகுந்த வீடும் சம்பாதிச்சு புகழ் பெற்றதும் தில்லில. பிஏ ஆங்கிலம் படிச்ச எனக்கு தமிழ் வாசிப்பாளர் வேலை! கேட்கவே கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். பெரும்பாலும் வானொலி அறிவிப்பாளர்னா அந்தந்த மொழிகள்ல புலமைபெற்றவர்களா இருப்பதுதான் வழக்கம். இதுக்கு மாறா நான் வந்தேன். கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரி என்பதில் எப்பவும் எனக்கு பெருமைதான். நாராயணசுவாமியை கல்யாணம் செய்துட்டு அவர் கூட தில்லிக்கு வந்தேன். யூகோ வங்கில வேலை கிடைச்சது. இந்த வங்கிக்கு பக்கத்துலயே இந்திய வானொலி மையம். திடீர்னு வானொலி மேல பற்று வந்தது. இப்ப மாதிரி அப்ப கடுமையான தேர்வுகள் எல்லாம் இல்ல. வானொலில வேலை செய்ய வாணி சான்றிதழ் கேட்பாங்க. இதுக்கு தேர்வு எழுதணும். தில்லியின் பல மொழிகளுக்கான வாசிப்பாளர்கள் வரிசைல எனக்கு தமிழ் வாசிப்பாளருக்கான வேலை கிடைச்சது.

வானொலியைப் பொறுத்தவரை உச்சரிப்பு முக்கியம். தினம் தினம் உச்சரிப்புல புதுசு புதுசா தெரிஞ்சுப்போம். ஆக, ஒவ்வொரு நாளும் நான் மாணவிதான். கத்துக்கவும் திருத்திக்கவும் தயங்கினதே இல்ல. உச்சரிப்பு மாதிரியே மொழிபெயர்ப்பும் முக்கியம். செய்திகள் எப்பவும் ஆங்கிலம் அல்லது இந்தில இருக்கும். நாமதான் அதை மொழிபெயர்ப்பு செய்துக்கணும். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு செய்திகள். இதுக்காக 3 மணிக்கே மொழிபெயர்ப்பு வேலை ஆரம்பிக்கணும். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. அப்ப அந்தந்த நாட்டுத் தூதரகங்களுக்கு போன் செஞ்சு தெளிவு பெறுவேன்.

என் வேலை வாசிப்போருக்கு செய்தியை ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழில மொழி பெயர்ப்பது. இப்ப இருக்கற பண்பலைகள் மாதிரி அப்ப வானொலி வேலை சுலபமில்ல. ழ, ல, ள உச்சரிப்புகள் எல்லாம் சரியா இருக்கணும். இப்ப மாதிரி அப்ப பேசத் தெரிஞ்சாலே வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க.

பொதுவா இப்ப வானொலி நிகழ்ச்சிகளை நான் கேட்கறதில்ல. டிவி சேனல்ஸும் பார்க்கறதில்ல. கேட்க நேர்ந்தா… பார்க்கும் வாய்ப்பு கிடைச்சா… பிழைகள் தெரிஞ்சா… உடனே போன் செஞ்சு திருத்திக்க சொல்வேன். அதை ஏத்துக்கறதும் ஏத்துக்காம போறதும் அவங்க விருப்பம். ஆனா, சொல்வது என் கடமை.

962ல வானொலி வேலை கிடைச்சது 2008ல தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பா கலைமாமணி விருது பெற்றேன். சாய்பாபா மேல எனக்கு தீவிர பக்தி. அவர் அருள்தான் இப்ப வரை என்னை வழி நடத்திட்டிருக்கு. முகமே தெரியாம வான்வழியா ஒரு மாநிலமே என் குரலைக் கேட்க காத்திருந்தது என்பதெல்லாம் வரம்.

இப்ப 83 வயசாச்சு. ஒரு மகன், ஒரு மகள். பிள்ளைங்க என்னை அன்பா பார்த்துக்கறாங்க. அம்பது வருஷங்கள் தில்லி ஆகாசவாணில பறந்துட்டேன். என்னதான் இந்தியப் பிரஜையா இருந்தாலும் தமிழகத்தை சுத்தணும்னு ஆசை. குறிப்பா மதுரை மீனாட்சி அம்மன், கோவை சிறுவாணி தண்ணீர், பாண்டிச்சேரி… இங்க எல்லாம் சுத்தணும்.

நான்கு மொழிகள்ல எனக்குப் புலமை உண்டு. ஆனா, சுமார் 22 மொழிகளுக்கு பிராம்ப்ட் செய்யணும். ‘பாரதம்’னு சரியா நான் உச்சரிக்கறதா பலரும் சொல்றாங்க. இதுக்கு காரணம், மத்தவங்க ‘B’ சப்தத்துல சொல்றப்ப நான் ‘P’ உச்சரிப்புல சொல்வேன்.என் வெற்றிக்குப் பின்னாடி என் கணவர் இருக்கார். இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஈடு கொடுக்கறார். எங்க அன்பைப் பார்த்து பிள்ளைகளே ஆச்சர்யப்படறாங்க.

வடக்க இருந்து செய்திகள் வாசிப்பது அவ்வளவு சுலபம் இல்ல. பாட்டேல், பாட்டில் பெயர்களைக் கூட நாங்க சரியா உச்சரிக்கணும். இல்லைனா ஊரே மாறிடும். இந்திரா காந்தியை பேட்டி கண்டது மறக்க முடியாத அனுபவம். அதே இந்திரா காந்தி மரணத்தை நானே அறிவிக்க வேண்டிய நிலை. என் மனநிலை எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. என்னைக் கவர்ந்த கம்பீரப் பெண்கள்ல அவங்களே முதன்மையானவர். அவர் மரணம் ரொம்பவே என்னை பாதிச்சது. ஆனாலும் சுகமோ துக்கமோ அது குரல்ல வெளிப்படக் கூடாது. இதுதான் செய்தியாளர்களின் முக்கியமான கடமை. இதையும் மீறி சற்றே தழுதழுத்துதான் இந்திரா காந்தி மரணத்தை அறிவிச்சேன். எங்கம்மா குடிச்ச காவிரி தண்ணீரும், நான் பார்த்த தமிழ் சினிமாக்களும்தான் என் தமிழ் உச்சரிப்புக்கு காரணம். பாரதியார் கவிதைகள் அவ்வளவு பிடிக்கும். திரும்பத் திரும்ப அதைப் படிப்பேன்.

75 வயசுல என் கணவர் மறைந்தார். அவ்வளவுதான் பாக்கியம்னு என்னை நானே தேத்திக்கிட்டேன். என்னை விட இரண்டரை வயசு பெரியவர். அவர் நினைவுகள்தான் இப்பவும் என்னை வழிநடத்திட்டு இருக்கு. எனக்கு ஒண்ணுன்னா கலங்கிடுவார்.

Leave A Reply

Your email address will not be published.