தங்கச் சங்கிலி அபகரித்த பெண் கைது!

நல்லூர் ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 4 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைக்குழந்தை அழுததை அடுத்து, குழந்தையைப் பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறிப் பாசாங்கு செய்த பெண் ஒருவர் திடீரென தாயின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். சங்கிலியைப் பறிகொடுத்த பெண், இது தொடர்பில் நல்லூர் உற்சவகாலப் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் 39 வயதுப் பெண் ஒருவரைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுக் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து தங்கச் சங்கிலி மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.