காத்திருப்பு முடிந்துவிட்டது… விரைவில் 5ஜி சேவை- பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் 5ஜி மொபைல் தொலைபேசி சேவை விரைவில் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை சுதந்திர தின உரையில் தெரிவித்தார். அதோடு கிராமங்களுக்கு கண்ணாடி இழைகள் மூலம் இணையசேவை வழங்கும் பாரத் நெட் திட்டமும் விரைவில் செயல்முறைக்கு வரும் என்று உறுதியளித்தார்.

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், தற்போது உள்ள இணைய சேவையை விட 10 மடங்கு வேகமான மற்றும் தடை இல்லாத இணைப்பை வழங்கும் 5G சேவைகள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்றார். அதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் ஜியோ, சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல், கௌதம் அதானியின் குழு மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு 5ஜி தொலைத்தொடர்பு அலைக்கற்றையை ரூ.1.5 லட்சம் கோடிக்கு அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் விற்பனை செய்தது.

சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள்!

பாரத் நெட் :

2015 இல் அரசாங்கம் ஆப்டிகல் கேபிள் எனப்படும் கண்ணாடி இழை வழியாக நாட்டின் மூலை முடுக்குகளுக்கு இணைய சேவை வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்தது.அந்த பாரத் நெட் சேவை நாட்டில் தொடங்குவதற்கு மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்றார். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் இணைய வசதி வெகு விரைவிலேயே அமலுக்கு வரும் என்றார் .

“இப்போது நாம் 5G சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம். நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. கிராமங்களுக்கு கண்ணாடி இழைகளை இணைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா கனவு கிராமங்களை கடந்து செல்லும் என்பது நிச்சயம் ,” என்றார்.

பொது சேவை மையங்கள்:

“இந்தியாவின் 4 லட்சம் பொது சேவை மையங்கள் கிராமங்களில் உருவாகி வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதன் மூலம் கிராமங்களில் 4 லட்சம் டிஜிட்டல் தொழில்முனைவோர் தயாராகி வருவதையும், கிராமங்களில் உள்ள மக்கள் அவர்களிடமிருந்து சேவைகளைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதையும் கண்டு பெருமையாகக் கொள்கிறேன்,” என்று மோடி கூறினார்.

இந்தியாவின் ‘டெக்கெட்'(techade ) தொடங்கியது..

5ஜி இணைய சேவையோடு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது. மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் செமி கண்டக்டர்கள் உற்பத்தியையும் உள்நாட்டில் அதிகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் உள்நாட்டு கைபேசி தயாரிப்பு அதிகரிக்கும் என்றார்.

இந்தியாவில் 5ஜி சேவைகள்

முழு நீள உயர்தர வீடியோ அல்லது திரைப்படத்தை மொபைல் சாதனத்தில் சில நொடிகளில் பதிவிறக்கும் வசதியை ஏற்படுத்தித் தரும். ஐந்தாம் தலைமுறை அல்லது 5G சேவைகள் மூலம், 5ஜி இணைக்கப்பட்ட வாகனங்கள், அதிவேக ஆக்மென்டட் ரியாலிட்டி, மெட்டாவர்ஸ் அனுபவங்கள், உயிர்காக்கும் பயன்பாட்டு வழக்குகள் மற்றும் மேம்பட்ட மொபைல் கிளவுட் கேமிங் போன்ற சேவைகளைப் பெறலாம் .

Leave A Reply

Your email address will not be published.