சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளில் டாஸ்மாக்கில் ரூ.273.92 கோடிக்கு மது விற்பனை

சுதந்திர தினத்திற்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. பொதுவாக குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதுபோக, மாநிலத்தின் முக்கிய நிகழ்வுகள், பண்டிகைகளுக்கு ஏற்பவும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி, சுதந்திர தினத்தையொட்டி நேற்றைய தினம் , தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. இதையொட்டி மது பிரியர்கள் ஆகஸ்ட் 14ம் தேதியே தங்களக்கு தேவையான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் வாங்கி சென்றனர்.

இதனால் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் அதிகம் கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினத்தில் எவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது என கணக்கை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 14ம் தேதி மட்டும் ஒரே நாளில் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் ரூ.55.77 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.53.48 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.54.12 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடிக்கும், கோவையில் ரூ.52.29கோடிக்கும் விற்பனை நடைப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.