பீகார் அமைச்சர்களில் 72 சதவீத பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் – ADR அறிக்கையில் தகவல்

பீகாரில் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசை அமைத்துள்ளார். முதலமைச்சராக நிதீஷ் குமார் மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த கூட்டணி அரசில் 33 அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களின் குற்றப்பிண்ணனி குறித்த விவரங்களை தேர்தல் உரிமை அமைப்பான ADR(Association for Democratic Reforms) வெளியிட்டுள்ளது. 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்ததில் இவர்கள் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாணப் பத்திரம் அடிப்படையாகக் கொண்டு இந்த விவரங்களை ADR அமைப்பு அறிக்கையாக தயாரித்துள்ளது. அதன்படி, புதிய அமைச்சரவையில் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 31 பேர் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர். மொத்தமுள்ள 33 அமைச்சர்களில் 23 அமைச்சர்கள் அதாவது 72 சதவீதம் கிரிமினல் குற்ற வழக்கு பின்னணி கொண்டவர்கள். இதில் 53 சதவீதம் அதாவது, 17 அமைச்சர்கள் மீது தீவிர குற்ற வழக்கு பதிவாகியுள்ளது.

தரவுகள் உள்ள 32 அமைச்சர்களில் , 27 அமைச்சர்கள் கோடீஸ்வர்கள், இவர்களின் சராசரி சொத்து ரூ5.82 கோடி. அதிகபட்சமாக மதுபனி தொகுதி எம்எல்ஏ சமீர் குமார் மஹசேத் தனது சொத்து மதிப்பை ரூ.24.45 கோடி என அறிவித்துள்ளார். குறைந்தபட்சமாக செனாரி தொகுதி எம்எல்ஏ முராரி பிராசத் தனது சொத்தை ரூ.17.66 லட்சம் என அறிவித்துள்ளார்.

கல்வி அறிவை பொறுத்தவரை, அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் 24 பேர் அதாவது 75 சதவீதத்தினர் பட்டதாரிகள். எட்டு பேர் அதாவது 25 சதவீதத்தின் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளனர். அமைச்சரவையில் 11 பேர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தையும், 16 பேர் தேஜஸ்வியின் ஆர்ஜேடியையும், இருவர் காங்கிரஸ் கட்சியையையும், ஒருவர் எஃஏஎம் கட்சியையும், ஒருவர் சுயேட்சையும் ஆவார்.

Leave A Reply

Your email address will not be published.