பீஸ் கட்டினால் தான் டிசி என கறார்… மாணவன் தீக்குளித்து கல்லூரி முதல்வரையும் கட்டிப்பிடித்ததால் பரபரப்பு

மாற்று சான்றிதழ் வாங்க வந்த மாணவனை மிகவும் அலைகழித்ததால், தன் மீது தீ வைத்துக்கொண்டு முதல்வரை கட்டிபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாதில் பிரபல கல்வி குழுமமான நாராயணா கல்வி குழுமத்தின் கிளை கல்லூரி ராமாந்தபூரில் செயல்பட்டு வருகிறது. அங்கு 12 வது வகுப்பு முடித்த மாணவனான நாராயண சுவாமி தன்னுடைய மாற்று சான்றிதழை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

சில நாட்களாக தன்னுடைய மாற்று சான்றிதலுக்காக அந்த மாணவன் அலைந்து திரிந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டி கடந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் கொடுக்க இயலும் என்று கறார் ஆக கூறிவிட்டார்.

பணம் செலுத்த முடியாத நிலையில் இருந்த நாராயண சுவாமி இன்று மதியம் முதல்வர் சுதாகர் ரெட்டி அறைக்கு சென்று தயாராக வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டான். உடனடியாக தன்னிடம் கறார் காட்டிய கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டியை கட்டிப்பிடித்து கொண்டான்.

இதனால் இரண்டு பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. கல்லூரி முதல்வர் அறையில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற ஆசிரியர்கள் தீயை அணைத்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த ராமானந்தபூர் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.